இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பங்கள் பற்றி டெல்லி (இந்தியா) இதுவரை தெளிவான எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், டெல்லியில் இருக்கும் தெற்காசிய பல்கலைக்கழகத்தில் இலங்கை அதிபருக்கு எதிராக மாணவர்கள் மௌனப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை அகற்றிவிட்டு ராஜபக்ஷேவைப் புதிய பிரதமராக கடந்த வெள்ளிக்கிழமை நியமித்தார் அதிபர் சிறிசேனா. இந்த நடவடிக்கைக்கு எதிராக உலக நாடுகள் பலவும் கருத்து தெரிவித்த நிலையில் டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் இலங்கை மாணவர்கள் எட்டு பேர் அதிபர் சிறிசேனாவுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதிபர் சிறிசேனாவின் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகவும், உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென்றும் அவர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். இந்தப் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் வெறும் எட்டு பேர்தான் பயில்கிறார்கள். ஆனால், அவர்கள் பல்கலை முழுதும் மாணவர்களிடையே தங்கள் நாட்டின் நிலையை எடுத்துச் சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட கவுசல்யா குமாரசிங்கே என்ற மாணவர், “ரனிலா, ராஜபக்ஷேவா என்ற பக்க சார்பு எடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், ஜனநாயக மரபுகளின்படி அதிபர் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். இதுவே இலங்கையர் ஒவ்வொருவரின் எண்ணமும்” என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அதிபருக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்றை டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைத்துள்ளனர் மாணவர்கள்.�,