இம்தியாஸ் அலியின் இயக்கத்தில் ஷாரூக் கான் மற்றும் அனுஷ்கா ஷர்மா நடிக்கும் படத்தின் உள்நாட்டு விநியோக உரிமைகள் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது.
தற்போதைக்கு தற்காலிகமாக ‘தி ரிங்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் விநியோக உரிமைகள் 125 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. என்.ஹெச் ஸ்டுடியோசின் நரேந்திர ஹிராவத் அதை வாங்கியிருக்கிறார். ‘ஆம், நான் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமைகளை வாங்கியிருக்கிறேன். ஆனால் அதன் விலை குறித்து பேச முடியாது’ என ஹிராவத் சொல்லியிருக்கிறார்.
2017 ஆகஸ்ட் மாதம் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாரூக் மற்றும் இம்தியாஸ் கை கோர்க்கும் முதல் படம் இது. ஏறத்தாழ பத்து வருடங்களாக பாலிவுட்டில் இருக்கும் இம்தியாஸ் அலி இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஷாருக் கானுடன் பணிபுரிவது என எடுத்த முடிவு ஏதேனும் அழுத்தத்தால் எடுக்கப்பட்டதா எனும் கேள்விக்கு, ‘நானும் ஷாரூக் கானும் ஒன்றாகப் பணிபுரிய காரணம், நாங்கள் செய்யாத வேலை ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தது மட்டும்தான், ஒரு அழுத்தமும் இல்லை’ என, முன்னர் அளித்த பேட்டியொன்றில் இம்தியாஸ் அலி தெரிவித்திருந்தார்.�,