அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், உலகத் தரவரிசையில் 55ஆவது இடத்தில் இருக்கும் ஜான் மில்மேனிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 பிரிவு ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் ஃபெடரர், இந்தப் போட்டியில் மிகவும் மெதுவாகவும், சோர்வாகவும் ஆடி 10 முறை டபுள் ஃபால்ட் முறையில் புள்ளிகளை இழந்தார். மூன்று முறை செட் புள்ளிகளைக் கைப்பற்றத் தவறியதன் விளைவாக 3-6, 7-5, 7-6 (7), 7-6 (3) என்ற புள்ளிக் கணக்கில் தோற்று வெளியேற்றப்பட்டார்.
வெற்றி பெற்ற ஜான் மில்மேன், “ஃபெடரர் மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். இந்தப் போட்டியில் அவரால் முடிந்தவற்றைச் செய்தார். அவர்தான் என்னுடைய ஹீரோ, ஆனால் இன்று நிச்சயமாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனை நான் எடுத்துக்கொண்டேன்” என்று கூறினார்.
5 அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டங்கள் உட்பட 20 கிரான்ட் ஸ்லாம் பட்டங்களைக் கொண்டுள்ள ஃபெடரர், தரவரிசையில் 50ஆவது இடத்திற்கு மேல் உள்ள நபரிடம் தோல்வியைத் தழுவுவது இதுவே முதல் முறையாகும்.
இதுவரை 14 முறை அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடரில் விளையாடியுள்ள ஃபெடரர், காலிறுதிக்குக் கூட முன்னேறாமல் வெளியேறுவது இதுதான் இரண்டாவது முறை. முன்னதாக 2013ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பன் டென்னிஸில் நான்காவது சுற்றில் ஸ்பெயினின் டாமி ரோபிரிடோவிடம் தோல்வியடைந்திருந்தார்.
�,”