�டிஜிட்டல் திண்ணை: இரட்டை வெற்றி – ஒற்றைத் தலைமை! எடப்பாடியால் ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது.

“அதிமுக இரு நாட்கள் முன்பே தீபாவளியைக் கொண்டாடிவிட்டது” என்ற முன்குறிப்பு அனுப்பிய வாட்ஸ் அப் விரிவான மெசேஜை அதற்குப்பின் அனுப்பியது.

“விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு இடைத் தேர்தல்களிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்று திமுகவிடம் இருந்தும் காங்கிரஸிடம் இருந்தும் ஆளுக்கு ஒரு தொகுதியைக் கைப்பற்றி விட்டது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவது என்பது தமிழகத்தில் இயல்புதான் என்றாலும் இரு தொகுதிகளிலும் பெற்ற வாக்கு வித்தியாசம் என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இதே நம்பிக்கை, உற்சாகத்தோடு அதிமுகவையும் ஒருசேர கைப்பற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாகிவிட்டார் எடப்பாடி. அதற்கான அனைத்து அறிகுறிகளும் நேற்று (அக்டோபர் 24) அதிமுக நடத்திய வெற்றிக் கொண்டாட்டங்களில் இருந்து தெரிகின்றன.

இரு தொகுதிகளிலும் அதிமுக வசதியான முன்னிலை பெற்ற பிறகு மதியம் ஒரு மணிக்கு அதிமுக தலைமைக் கழகத்துக்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அப்போது துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்தார். மருது சகோதரர்களின் நினைவு நாளை போற்றும் வகையில் சிவகங்கை காளையார்கோவிலுக்குச் சென்று மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் அதன்பின் மதுரை வங்கிப் பெட்டகத்திலிருந்து தேவர் சிலைக்கு அளிக்க வேண்டிய தங்க கவசத்தைக் கையெழுத்திட்டு ஒப்படைக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதனால் அவர் சென்னை வருவது தாமதமாகிவிட்டது.

இதேநேரம் அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்த எடப்பாடியிடம் சில நிர்வாகிகள், ‘பன்னீர்செல்வம் மதுரையிலேர்ந்து வந்துகிட்டிருக்காரு. வெற்றிக் கொண்டாட்டங்களை அவர் வந்ததும் வைத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, ‘தொண்டர்கள் நிர்வாகிகள் கூடி இருக்காங்க. பத்திரிகையாளர்கள் வந்துட்டாங்க. நம்ம நடத்துவோம்’ என்று சொல்லி தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு ஊட்டினார். கட்சியின் அவைத் தலைவரும் தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டவருமான மதுசூதனனுக்கு முதலில் இனிப்பு ஊட்டி அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரிடமும் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.

இதன் பிறகு ஓபிஎஸ் 4 மணிக்கு மேல் சென்னை வந்தார். எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பன்னீருக்காகக் காத்திருக்காமல் எடப்பாடி அதிகாரபூர்வ கொண்டாட்டங்கள் எல்லாம் முடித்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.

இதேநேரம் நேற்று தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர் ராஜா, ‘தேர்தல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நோக்கிதான் கேள்விக்கணைகளை வீசினார். அவருக்கு மக்கள் பதில் சொல்லி எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை நிரூபித்திருக்கிறார்கள். அதிமுகவை இனி யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமையை எடப்பாடி பழனிசாமிதான் உருவாக்கியிருக்கிறார்’ என்றெல்லாம் சரமாரியாக எடப்பாடி பழனிசாமியை உயர்த்திப்பிடித்தார். ஒருகட்டத்தில், ‘அண்ணா இறந்த பின் கலைஞர் எப்படி திமுகவைக் காப்பாற்றினாரோ… அதேபோல இப்போது அம்மா இறந்த பிறகு அதிமுகவை எடப்பாடி காப்பாற்றியிருக்கிறார்’ என்று பேசினார் அன்வர்ராஜா.

ஏற்கெனவே மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்டபோது, ‘இங்கே என்ன பண்றதா முடிவெடுத்திருக்கீங்க’ என்று பன்னீரிடம் எடப்பாடி கேட்டதை மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் சொல்லியிருக்கிறோம். இந்த நிலையில் இரு தொகுதி இடைத் தேர்தல் வெற்றிக்கு முழு காரணமாக எடப்பாடியைச் சுட்டிக்காட்டும் போக்குகள் அதிமுகவில் அதிகரித்து வருகின்றன. இந்த இரட்டை வெற்றியின் மூலம் ஒற்றைத் தலைமையை நோக்கி எடப்பாடி செல்கிறார் என்பதையே நேற்றைய அதிமுகவின் நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share