dசிறப்புக் கட்டுரை: நீதிநாயகம் சுரேஷ்

Published On:

| By Balaji

-எஸ்.வி.ராஜதுரை

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளை – Justice என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுபவர்களை – ‘நீதியரசர்கள்’ என்று சொல்லும் பழக்கம் தமிழ் ஊடகங்களிலும் பொதுவெளியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. நிலப்பிரபுத்துவ அரசராட்சி காலத்தை நினைவூட்டும் இந்தச் சொல்லுக்குப் பதிலாக ‘நீதிநாயகம்’ என்ற சொல்லை உருவாக்கித் தந்தவர் தோழர் தியாகு. இதுதான் Justice என்ற சொல்லின் உட்பொருளைப் பிரதிபலிக்கக்கூடியது. என்னைப் போன்றவர்கள் 1999ஆம் ஆண்டிலிருந்தே இந்தச் சொல்லைத்தான் பயன்படுத்திவருகிறோம்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவும் தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது அவற்றை எதிர்த்துப் போராடும் மனித உரிமை அமைப்புகள், தனிமனிதர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோருக்கு உள்உந்துதல் தந்துவந்தவர்களாகவும் இருந்தவர்களில் முக்கியமானவர்கள் நீதிந��யகங்கள் பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ண ஐயர், பி.பி.சாவந்த், ஹோஸ்பெட் சுரேஷ் ஆகியோராவர். ஐயர் மறைந்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளாகிவிட்டன. பி.என்.பகவதி மூன்றாண்டுகளுக்கு முன் காலமானார். ஹோஸ்பெட் சுரேஷ் நேற்று முன் தினம் (11.6.2020) காலமானார்.

உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலர் ஓய்வு பெற்ற பிறகும்கூட அரசாங்கம் உருவாக்கும் பதவிகளில் (விசாரணை ஆணையங்கள் போன்றவற்றில்) அமர்வதற்கு ஆசைப்படுவது வழக்கம். அண்மைக்காலமாக, இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும் அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கூட ஓய்வுபெற்ற பின் மாநில ஆளுநர் பதவியிலும் மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவியிலும் விருப்பத்தோடு அமர்வதைப் பார்த்து வருகிறோம்.

வாஜ்பாயி அரசாங்கம், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ‘மறு ஆய்வு’ செய்ய வேண்டும் என்று முடிவு செய்து, அதன் பொருட்டு பல்வேறு கருத்துகளைத் திரட்டும் பொறுப்பை வீ.ஆர். கிருஷ்ண ஐயரிடம் தந்திருந்தது. இந்திய அரசமைப்புச் சட்டத்தை இந்துத்துவத்தன்மை கொண்டதாக மாற்றும் உள்நோக்கத்தோடுதான் இந்த நடவடிக்கையை வாஜ்பாயி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்னும் கருத்தைப் பலர் கொண்டிருந்தனர். இந்த ‘மறு ஆய்வு’ தொடர்பாக ஐயர் சென்னைக்கு வந்திருந்த போது நானும் பிற நண்பர்களும் அவரைச் சந்தித்தோம். அவர் பொறுமையுடன் கூறினார்:

‘அரசியல் அமைப்புச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பதைப் பலதரப்பட்டவர்களிடம் அறிந்து கொள்ளத்தான் நான் இருக்கிறேன். நீயும் எதையாவது எழுதித் தா. அதையும் சேர்த்துக் கொள்கிறேன்’. ‘இதெல்லாம் வெறும் காகித வேலைதானே சார். இதில் உங்கள் அருமையான நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கிறீர்கள் சார் ’ என்று கூறிவிட்டு வந்து விட்டோம். எனினும் அவருடன் கருத்து முரண்பாடு கொள்பவர்களை மதிக்கின்ற அவரது பண்பை நினைத்து நாங்கள் மகிழ்ந்ததும் உண்டு. அவரது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், மூப்பின் காரணமாக அவரது சிந்தனையில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்பட்டு வந்ததைக் கண்டு நாங்கள் மிகுந்த கவலை கொண்டோம்.

2013இல் ராஜிவ் காந்தியைப் புகழ்ந்து ‘தி ஹிந்து’வில் கட்டுரை எழுதியிருந்தார். மன்மோகன் சிங்கைப் பாராட்டியும் எழுதினார். பிறகு, 2014இல் ‘நரேந்திர மோடியை உண்மையான மதசார்பற்ற சோசலிஸ்ட்’ என்று எழுதியிருந்தார். ’ஐயருக்கு ஏன் இப்படி புத்தி கெட்டுவிட்டது என்று நாங்கள் கோபப்பட்டோம். ஒருவேளை ஐயரை நேரில் சந்தித்து மோடியை ஏன் இப்படிப் புகழ்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டிருந்தால் அதற்கும் அவர் பொறுமையாக பதில் சொல்லியிருக்க்கூடும் – அவருக்கே உரிய பாணியில் : ‘Am I wrong? But tell me who is the better choice?”.

எனினும், நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் சட்டத்திற்குத் திருத்தங்கள் கொண்டு வராமலேயே அரசாங்க ஆணைகள், முடிவுகள் மூலம் அச்சட்டத்தின் ஆன்மாவையே குலைக்கக்கூடிய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஐயர் உயிரோடு இந்திருந்தால் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்.

இதுபோன்ற தடுமாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடம் தராத வகையில் கடைசி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஹோஸ்பெட் சுரேஷ். பம்பாய் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து 1991ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிநாயகம் சுரேஷ், மகாராஷ்டிர அரசாங்கம் அமைத்த ஆணையங்களில் ஒன்றே ஒன்றில் மட்டுமே பதவி வகித்ததாக என்னிடம் ஒருமுறை கூறினார். – அது குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றுவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம் என்பதால் மட்டுமே.

காவேரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் டிசம்பர் 2001இல் தமிழர்களுக்கு எதிராக கன்னட வெறியர்கள் நடத்திய கலவரம், தாக்குதல் தொடர்பான உண்மைகளை விசாரணை செய்வதற்காக நீதிநாயகம் டெவேடியா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில் பங்கேற்ற நீதிநாயகம் சுரேஷ் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் கொடுமைகளையும் எடுத்துக் காட்டும் அறிக்கை வரைவதில் முக்கியப் பாத்திரம் வகித்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து பம்பாயில் 1992 டிசம்பரிலும் 1993இலும் நடந்த கலவரங்களைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட அரசு சாராத ‘ இந்திய மக்கள் மனித உரிமை ஆணைய’த்தில் தலைமைப் பொறுப்பு வகித்த அவர், பம்பாயின் மூத்த வழக்குரைஞர் எஸ்.எம். தாவுதின் துணையுடன் செயல்பட்டார். முஸ்லிம் மக்களின் உடைமைகளும் உயிர்களும் பெருமளவில் அழிக்கப்பட்டதை அவர்கள் ‘மக்களின் தீர்ப்பு’ (The People’s Verdict ) என்று தலைப்பிடப்பட்ட அறிக்கையில் எடுத்துரைத்தனர்.

1995 ஜனவரியில் மும்பையில் குடிசைப் பகுதி மக்கள், நகர வளர்ச்சி என்ற பெயரில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது தொடர்பான உண்மைகளைக் கண்டறிய, டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிநாயகமாக இருந்த ராஜிந்தர் சச்சார் ( பி.யு.சி.எல்,அமைப்பின் அனைந்திந்தியத் தலைவராக இருந்த அவர், இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை பற்றி ஆராய மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று, நாடெங்கிலும் பயணம் செய்து திரட்டிய விவரங்கள்தான் ‘சச்சார் கமிட்டி அறிக்கை’ என்று அழைக்கப்படுகிறது) மூத்த வழக்குரைஞர் எஸ்.எம்.தாவுத் ஆகியோருடன் இணைந்து செயலாற்றினார். அவர்கள் கண்டறிந்த உண்மைகள், 1995இல் ’வலுக்கட்டாய வெளியேற்றங்கள் – சாலையோர,குடிசைப் பகுதி வாழ் மக்களின் வீடுகள் மூர்க்கத்தனமாக இடித்துத் தள்ளப்பட்டது பற்றிய இந்திய மக்களின் தீர்ப்பாயத்தின் விசாரணை’ (Forced Evictions – An Indian People’s Tribunal Enquiry into the Brutal Demolitions of Pavement and Slum Dwellers’ Homes) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

சென்னையில் 1999இல் நீதிநாயகம் வி..ஆர். கிருஷ்ண ஐயரைத் தலைவராகவும், என்னை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ மரண தண்டனைக்கு எதிரான இயக்கத்திற்கு ( Campaign Against Death Penalty) தொடக்கம் முதலே ஆதரவளித்து வந்தார். ’மரண தண்டனை ஒழிப்பு’ தொடர்பாக அந்த இயக்கத்தால் கொண்டு வரப்பட்ட வெளியீடு பெரிதும் அவர் எழுதி அனுப்பிய விவரங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அவரை அறிமுகப்படுத்திய பெருமை காலஞ்சென்ற மனித உரிமை ஆர்வலர் ஆஸி ஃபெர்ணாண்டஸையே சாரும். தமிழ்நாட்டில் நிலவிய மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பான ‘பொது விசாரணைகள்’, ’உண்மை அறியும் குழுக்கள்’ ஆகியவற்றில் அவர் பங்கேற்று ஆற்றிய பணிகளைப் பற்றி ஒரு நூலே எழுதலாம். தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்களில் உள்ள மனித உரிமைப் போராளிகளுக்கு காலஞ்சென்ற டாக்டர் கே. பாலகோபாலைப் போலவே சட்ட, நீதிக் கவசமாகத் திகழ்ந்தவர் இந்த நீதிநாயகம்.

அவருடைய பணிகளில் மிகவும் முக்கியமானது, ’இந்திய மக்கள் தீர்ப்பாய’த்தின் உண்மை அறியும் குழுவில் நீதிநாயகம் வி.ஆர்.கிருஷண ஐயரின் தலைமையில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிநாயகம் பி.பி.சாவந்த் அவர்களுடன் இணைந்து 2002இல் குஜராத்தில் முஸ்லிம்கள் இனக்கொலை செய்யப்பட்டு, முஸ்லிம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, முஸ்லிம்களின் உடைமைகள் அழிக்கப்பட்டது தொடர்பாக 2002 மார்ச், ஏப்ரல் மாதங்களில் குஜராத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று, 2000த்திற்கு மேற்பட்ட எழுத்துபூர்வமான சாட்சியங்களைத் திரட்டியதாகும்.

குஜராத் மாநிலத்தின் மூத்த காவல் மற்றும் பிற உயர் அதிகாரிகளையும் அக்குழு சந்தித்து அவர்கள் கூறியவற்றையும் பதிவு செய்தது. அந்தக் குழு கண்டறிந்த உண்மைகள் ’மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ (titl-ed Crime Against Humanity.) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.

நீதிநாயகம் சுரேஷ் , குஜராத் படுகொலைகள் தொடர்பாக சில அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டார். மேற்சொன்ன உண்மை அறியும் குழுவினர் சந்தித்தவர்களிலொருவரும் நரேந்திர மோடி அமைச்சரவையின் உள்துறை அமைச்சருமாக இருந்த ஹரேன் பாண்டியா (அவர் 2003இல் கொலை செய்யப்பட்டார்), முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டிருந்த இந்துக்களைத் தடுத்து நிறுத்த வேண்டாம் என்று மூத்த போலிஸ் அதிகாரிகளிடமும், அரசாங்க அதிகாரிகளிடமும் நரேந்திர மோடி கூறினார் என்பதை அக்குழுவிடம் கூறியிருக்கிறார்.

குஜராத் கலவரத்தின்போது வடோடரா (பரோடா) நகரில் இருந்த பெஸ்ட் பேக்கரியில் 14 முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் அரசாங்கமும் குஜராத் நீதிமன்றங்களும் நடந்து கொண்ட விதத்தைக் கருத்தில் கொண்டு பெஸ்ட் பேக்கரி வழக்கு தொடர்பாக புதிய புலனாய்வும், குஜராத்துக்கு வெளியே உள்ள ஒரு மாநிலத்திலுள்ள ஒரு நீதிமன்றத்தில் விசாரணையும் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்ற நீதிநாயகம் சுரேஷ், குஜராத்தில் நடபெற்றது சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மோசடி என்றும், மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்களும் மனித உரிமை விவகாரங்களில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் நீதிமன்றமும் ஒரு புதிய போக்கை உருவாக்கியுள்ளது என்றும் கூறினார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் வேறான போக்கைத்தான் உச்சநீதிமன்றம் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருவதை நாம் பார்க்கிறோம்.

மன்மோகன் சிங் காலத்தில் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டிருந்த ’இனக்கொலை மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் 2004’ (Prevention of Genocide and Crimes against Humanity Act 2004) என்பதை வரைவதில் நீதிநாயகம் சுரேஷ் முக்கியப் பங்கு வகித்தார். இந்த சட்டம் கொண்டு வரப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர்களிலொருவர் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்பது இங்கு நினைவுகூரப்பட வேண்டும்.

மோடி அரசாங்கத்தின் எத்தனையோ அச்சுறுத்தல்களுக்கிடையே மதவெறிக்கு எதிராகவும் மதச்சார்பற்ற அரசியலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வரும் ஜவெத் ஆனந்த், தீஸ்தா செதல்வாட் இணையர் நடத்திவரும் Communalism Combat ஏட்டில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். 2ஜி ஊழல் வழக்கில் குற்றப் பத்திரிகை, சாட்சியங்கள் ஆகியவற்றை உன்னிப்பாகவும் நடுநிலையுடனும் அவதானித்து வந்த அவர், ‘There is no case against A Raja’ என்று என்னிடம் ஒன்றிரண்டு முறை கூறியிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்திலுள்ள ஹோஸ்பெட் என்னும் இடத்தில் பிறந்து, மும்பையில் வழக்குரைஞராகவும் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி, இந்திய மக்கள் அனைவரது அடிப்படை உரிமைகளையும் மனித உரிமைகளையும் காப்பதற்காக 28 ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து வந்த நீதிநாயகம் சுரேஷ் காட்சிக்கு எளியவர்; பழகுவதற்கு இனியவர். அவரை நான் கடைசியாக சந்தித்தது 2013 ஆகஸ்ட் மாதத்தில்; கரூரில் அவர், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், நம்மாழ்வார் ஆகியோருடன் நானும் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது.

அவரை கோயமுத்தூர் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சூலூர் வந்ததும் போக்குவரத்து நெரிசல். விநாயகர் ஊர்வலம் என்று சொன்னார்கள். கோவையிலிருந்து பம்பாய்க்குச் செல்லும் கடைசி விமானத்தைப் பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று அவருக்குப் பதற்றம் ஏற்பட்டுவிட்டது. விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்ற விதி முன்னாள் நீதிபதிகளுக்குப் பொருந்தாது, விமானம் புறப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன் அவர்கள் போய் சேர்ந்தாலே போதும் என்றாலும், அவர் சாதாரணப் பயணிகளைப் போலவே தானும் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தார். எனினும் விமானம் புறப்படுவதற்கு 25 நிமிடங்கள் இருக்கும்போதுதான் எங்களால் கோவை விமான நிலையத்தை அடைய முடிந்தது. காரை விட்டு இறங்குவதற்கு முன், இந்திய அரசமைப்புச் சட்டம், அதில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் முதலியன பற்றி அவர் எழுதிய ஆங்கில நூலொன்றின் பிரதியை அவரது கையெழுத்துடன் எனக்குப் பரிசாகக் கொடுத்தார்.

எளிமையும் இனிமையும் வாய்ந்த அவரது வாழ்க்கையைப் போலவே அவரது மரணமும் அமைந்திருந்தது. இறப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு வரை அவரது உறவுக்காரப் பெண்னுடன் சீட்டு விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரே ஒரு நிமிடத்தில் அவரது ஆவி பிரிந்திருக்கிறது.

**கட்டுரையாளர் குறிப்பு**

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share