fதலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்!

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே வரும் நவம்பர் 18ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ளார்.இதனையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீதிமன்ற வட்டாரங்களில் எழுந்தது. தனக்கு அடுத்து நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு பரிந்துரைத்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கும் உத்தரவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (அக்டோபர் 29) கையெழுத்திட்டுள்ளார். பாப்டே வரும் நவம்பர் 18ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை அவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1956ஆம் ஆண்டு பிறந்த எஸ்.ஏ.பாப்டே, நாக்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2000ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2012ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த பாப்டே, 2013இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அயோத்தி வழக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய வழக்கு மற்றும் பட்டாசுக்கு எதிரான மனுக்கள் என பல முக்கிய வழக்குகளை இவர் விசாரித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share