கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க முடியாது என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதின்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ் குறித்து தனது கொள்கையை தெரிவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த மே 24ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில்,ஒன்றிய அரசு 183 பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ”இதுவரை நாட்டில் கொரோனாவால் 3.85 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மருத்துவ செலவு அதிகரிப்பு, குறைந்த வரி வருவாய் ஆகியவற்றால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க முடியாது.
ஏற்கனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக, ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, ஏழை எளிய மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத் திட்டங்களையும் முன்னெடுத்து இருக்கிறது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ் குறிப்பிடப்பட்ட 12 பேரழிவுகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை கொடுக்க வழி வகை உள்ளது. கொரோனா உயிரிழப்பை இச்சட்டத்தின் கீழ் கொண்டு வருவது பொருத்தமானதாக இருக்காது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு 2020 – 21 நிதி ஆண்டில் ஒதுக்கப்பட்டு இருக்கும் மொத்த தொகையே ரூ.22,184 கோடிதான்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க இந்த முழு தொகையையும் செலவழித்துவிட்டால், எதிர்வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளுக்கு செலவழிக்க மாநிலங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம்.
தற்போது இருக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இழப்பீடு வழங்கினாலும், அது தேவையற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். எனவே இழப்பீடு வழங்குவது நன்மையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். இழப்பீடு வழங்குவதன்மூலம் கூடுதல் நிதி சுமையால் சுகாதாரம் மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதியும் குறையும். எதிர்காலத்தில் வரும் புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படும்.
அடுத்தடுத்து வரும் கொரோனா அலைகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,