வரும் நவம்பர் 1ஆம் தேதி மெரினா கடற்கரை பொது மக்களுக்காகத் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரைகள், திரையரங்குகள் ஆகியவற்றைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 13) நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை எப்படிச் சரி செய்யப் போகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும், வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வந்துவிட்டதாகவும், மீனவர் சங்கத் தலைவர்களுடன் கலந்து பேசி இனிமேல் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வரும் நவம்பர் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்கும் என்று ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார்.
இதை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் மாதம் முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழகத்தில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதுபோன்று காலை, மாலையில் மெரினா கடற்கரையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மேலும், நீதிபதிகளும் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் என்று தெரிவித்து வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
**-பிரியா**�,”