காவலர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சமா?: டிஜிபி திரிபாதி

Published On:

| By Balaji

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். காவல்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி திரிபாதி இன்று (ஆகஸ்ட் 19)  தூத்துக்குடி விரைந்தார்.

நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உருவப்படத்திற்கு டிஜிபி திரிபாதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஒரு சில காவலர்கள் இறந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது சுப்பிரமணியம் குடும்பத்துக்கு, 50 லட்சம் ரூபாய் தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காவலர்கள் பணியில் இருக்கும் போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் எதுவும் இல்லை. வழக்குகள் சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. தற்போது முதல்வர் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.  இதையடுத்து சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்பப்பட்ட பிறகு அதன் அடிப்படையில் முதல்வர் முடிவெடுப்பார்.

இறந்த காவலரின் உடலில்  ஆணிகள் இருந்தது பற்றி உடற்கூறு ஆய்வுக்குப் பின் தான் முழுமையான விபரம் தெரியவரும்.  தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது வெடிகுண்டு கலாச்சாரங்கள் அதிகரித்ததாகத் தெரியவில்லை.

போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. எதிர்பாராத விதமாக  இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. குற்றவாளிகள் பயன்படுத்தும் ஆயுதங்கள் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டாலும் அதற்கு ஒருபடி மேல் எதிர்த்தாக்குதல் செய்யும் வகையில் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காவல்துறையினரை யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியும். அவர்களுடைய வாழ்க்கை, உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும். காவல்துறையினரை ஊக்கப்படுத்துவதற்காக நான் இங்கு வரவில்லை. ஊக்கப்படுத்துவதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இந்த காவல்துறை குடும்பத்துக்கு நான் தான் தலைவர். இந்த குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்ட நிலையில், காவலர்களுக்கு நான் உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காகத் தான் நான் இங்கு வந்தேன் என்றார்.

உயிரிழந்த ரவுடி துரைமுத்துவை ஏற்கனவே பிடித்து வைத்து அவரை என்கவுண்ட்டர் செய்யக் கொண்டு சென்றதாகவும்,  போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பிக்க முயன்றதாகவும், ஒரு தகவல் வந்துகொண்டிருக்கிறது என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இப்படி ஒரு விஷயம் நடந்ததாகத் தெரியவில்லை.  இது  உண்மையில்லை. அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு காவல்துறை சார்பில் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு உதவி செய்யப்படும்.  உயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது காவலரின் உடலுக்கு  மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிஜிபி திரிபாதி,தென்மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி,  தூத்துக்குடி எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share