~சிரஞ்சீவியின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழிசை

Published On:

| By Balaji

சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்க்க தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு சிரஞ்சீவி அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9) படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார் தமிழிசை.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் *சைரா நரசிம்ம ரெட்டி.* அக்டோபர் 2ஆம் தேதி நான்கு (தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம்) மொழிகளில் வெளியானது இந்தப் படம். தெலுங்கில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சைரா நரசிம்ம ரெட்டி, சிரஞ்சீவியின் 151ஆவது படமாகும்.

கடந்த அக்டோபர் 5ஆம் தேதி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார் சிரஞ்சீவி. இந்தச் சந்திப்பின்போது தசரா வாழ்த்துகளைத் தெரிவித்த சிரஞ்சீவி, ஆளுநர் தமிழிசை தனது சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பார்க்க வேண்டுமெனவும், படம் குறித்த அவரது கருத்துகளைத் தெரிந்துகொள்ள தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறி படம் பார்க்க அழைப்பு விடுத்தார் சிரஞ்சீவி.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 9) ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் சிறப்புக் காட்சியை, தமிழிசை அவரது குடும்பத்தினருடன் கண்டுகளித்தார்.

படம் பார்த்த பின், தனது ட்விட்டர் கணக்கில் தமிழிசை செளந்தரராஜன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார். அதில், “மெகாஸ்டார் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி பார்த்தேன். அவரது அற்புதமான நடிப்புக்காகவும் பங்களிப்புக்காகவும் வாழ்த்துகிறேன். காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் விழாவுக்குப் பொருத்தமான அஞ்சலி.

இந்தப் படம், சுதந்திரப் போராட்டத்தின் நினைவுகளைக் கொண்டு வந்தது. தேசபக்தியைக் காணவும் ஊக்குவிக்கவும் தற்போதைய தலைமுறையினருக்கு இதுவொரு வாய்ப்பு. சுதந்திரப் போராட்டத்தில் தென்னிந்தியாவின் பங்களிப்பு நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் நம்பகமான போர் வீரராகத் தமிழர் ராஜபாண்டி கதாபாத்திரம் *(விஜய் சேதுபதி நடித்தது)* தமிழ் மற்றும் தெலுங்கு மக்களின் சகோதரத்துவத்தைப் போற்றுவதாகும். சைரா நரசிம்ம ரெட்டி ஓர் அற்புதமான படம், ஒவ்வோர் இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார் தமிழிசை செளந்தரராஜன்.

இது குறித்து நடிகர் சிரஞ்சீவி, “தமிழிசை செளந்தரராஜனுக்குப் படம் பிடித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிறந்த படத்தைத் தயாரித்ததற்காக முழு அணியையும் அவர் பாராட்டினார்” எனக் கூறி தனது நன்றியைத் தமிழிசைக்குத் தெரிவித்தார் சிரஞ்சீவி.

மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் காலா படத்துக்குப் பின் அவர் பார்த்த மற்றொரு படம் சைரா நரசிம்ம ரெட்டி எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share