திமுகவின் மறைமுகத் தேர்தலுக்கு அதிமுகவே காரணம்: ஸ்டாலின்

Published On:

| By Balaji

உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2006ஆம் ஆண்டு மறைமுகத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள சூழலில் மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தது.

இதுதொடர்பாக தென்காசி புதிய மாவட்டத் துவக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 1996 வரை மறைமுகத் தேர்தல் நடைமுறையில் இருந்ததாகவும், ஸ்டாலினை சென்னை மேயர் ஆக்குவதற்காக நேரடி தேர்தல் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், “2006ஆம் ஆண்டு மீண்டும் மறைமுகத் தேர்தலை கொண்டுவந்தது திமுக. மறைமுகத் தேர்தலுக்கு சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தவர் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தான்” என்று விமர்சித்திருந்தார்.

இவற்றிக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று (நவம்பர் 23) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “‘2001-ல் என்னுடைய சென்னை மாநகர மேயர் தேர்தல் வெற்றியில் தொடங்கி, தமிழகத்தில் எங்கெல்லாம் திமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தார்களோ அங்கெல்லாம் ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்தி உள்ளாட்சி நிர்வாகத்தையே அடியோடு நிர்மூலமாக்கியது அதிமுக அரசு.

அபத்தமான அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, திமுக ஆட்சிக் காலத்தில் மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் கொண்டு வரப்பட்டது. அதற்கு அவையில் நான் சொன்ன காரணத்தைத் தனது பதிலில் சுட்டிக்காட்டி திமுகவின் கொள்கை மாற்றத்திற்கான நியாயத்தை தன்னையும் அறியாமல் விளக்கிய முதல்வருக்கு நன்றி” என்று விளக்கம் அளித்துள்ளார்.

எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் சீரழிக்கப்படும் எனவும், அந்தச் சீரழிவிலிருந்து மீட்கத்தான் திமுக ஆட்சியில் மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளின் நிலை என்ன? 2016-ல் இருந்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. நீங்கள் சொல்வது போல் நடப்பது அதிமுக ஆட்சிதானே. நேரடித் தேர்தல்தான் நடைபெறும் என்று முதல்வரே பேட்டியளித்தார். ஆனால் ஒரே வாரத்தில் ‘மறைமுகத் தேர்தல்’ என்று அவசரச் சட்டம். ஏன் இந்தக் குழப்பமும் குளறுபடியுமான கொள்கை மாற்றம்? உங்கள் ஆட்சியில், உங்களை உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட விடாமல் தடுத்தது யார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதல்வர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் பொய்யும், புரட்டும் பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல என்று விமர்சித்துள்ள ஸ்டாலின், “உங்களின் அறியாமைக்கும் இயலாமைக்கும் திமுக மீது பழிபோடும் போக்கைக் கைவிட்டு, வகிக்கின்ற பொறுப்புக்கேற்ப, பொய்களைத் தவிர்த்து, இனியேனும் உண்மையைப் பேசுங்கள்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share