இலங்கை அதிபர் தேர்தலில், தபால் வாக்கு எண்ணிக்கைகள் இரவு முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், கோத்தபய ராஜபக்ஷே முன்னிலை வகித்து வருகிறார்.
இலங்கையில் எட்டாவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை முழுவதும், 12,845 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. இந்த முறை 80 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையக் குழு தெரிவிக்கிறது. யாழப்பாணத்தில் 66%, வன்னியில் 75%, முல்லைத் தீவு 76%, கிளிநொச்சி 73% என தமிழர் பகுதிகளில் அதிக அளவு வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.
இந்தத் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஷே, தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா ஆகியோர் முக்கியப் போட்டியில் இருக்கின்றனர்.
நேற்று (நவம்பர் 16) தேர்தல் முடிந்த உடனேயே மாலையிலிருந்து தபால் வாக்குகள் எண்ணப்படும் பணிகள் தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து நடந்துவரும் வாக்கு எண்ணிக்கையில் முதன்முதலாக காலி மாவட்டத்திலிருந்து முதல் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது.
அதிகாலை 2 மணிக்கு வெளியான முதல் தபால் எண்ணிக்கை முடிவில் கோத்தபய ராஜபக்ஷே 25,099 வாக்குகள் (67.49 சதவிகிதம்) பெற்றார். சஜித் பிரேமதாசா 9,093 வாக்குகள் பெற்றார். அனுரகுமார திசநாயக 2,450 வாக்குகள் பெற்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் வாக்குப்பதிவு பிரிவிற்கான எண்ணிக்கை முடிவுகளில் சஜித் பிரேமதாசா 27,605 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோத்தபய ராஜபக்ஷேவை விட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் சஜித் பிரேமதாசா ராஜபக்ஷேவைவிட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாசா பெற்ற வாக்குகள் 2,62,046. கோத்தபய ராஜபக்ஷே பெற்றவை 20,068.
தொடர்ந்து நடந்த வாக்கு பதிவு எண்ணிக்கையில், ராஜபக்ஷே 52.87 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
தபால் வாக்கு எண்ணும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். அதே நேரம், சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்ற தேர்தல் முடிவுகள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாகத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க சில மணிநேரம் தாமதம் ஏற்படும் எனத் தேர்தல் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதால் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.�,