புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு எதிரில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர்கள் சேர்ந்து நூதன பேனர் ஒன்றை வைத்திருந்தனர். அந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகப் பதிவு செய்தும் இன்னும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைக்கான எந்த அறிவிப்பும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து வரவில்லை.
இதுபற்றி அறிந்து விரக்தியடைந்த அவரின் நண்பர்கள் பேனர் ஒன்றை வைத்தனர். அந்த பேனரில், ‘வெற்றிகரமாக 24ஆம் ஆண்டு பதிவு மூப்பைப் பதிவுசெய்த, எங்கள் இனிய நண்பர் கே.ஆனந்தராஜ் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பின்குறிப்பு: நலம் விசாரித்துக்கூட கடிதம் வந்ததில்லை. இப்படிக்கு: வேலை இல்லா இளைஞர்கள்’ என்று பதிவு எண், செல்போன் எண்ணுடன் ஃபிளெக்ஸ் பேனர் வைத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் வருவோர் போவோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஆனந்தராஜ், புதுக்கோட்டையில்தான் இருக்கோம். பி.எட் முடிச்சிருக்கேன். 1997இல் பத்தாம் வகுப்பு, 1999இல் ப்ளஸ் டூ முடிச்சு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிஞ்சேன். அதன் பிறகு பி.எட் முடிச்சிட்டு உடனே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செஞ்சேன். அரசு ஓட்டுநர் வேலையாவது கிடைக்குமா என்ற ஆசையில் 2017இல் ஹெவி லைசென்ஸ் வாங்கிட்டு அதையும் பதிவு செய்தேன். கிட்டத்தட்ட 24 வருஷமாச்சு. எது முடிச்சாலும் கொஞ்சம்கூட தாமதிக்காம உடனே வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு செஞ்சிருவேன். நண்பர்கள்கூட கேலி, கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் கண்டுக்காம பதிஞ்சிருவேன். ஆனா, அதிகாரிங்ககிட்டயிருந்து இதுவரையிலும் எந்த அழைப்பும் வரலை” என்று கூறியுள்ளார்.
மேலும், “இரண்டு மூணு தடவை நேரடியாக அதிகாரிகளைப் பார்த்து மனு கொடுத்தும் வேலைக்கான எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ‘வேலை வந்தா சொல்றோம்’னு சொல்லி அனுப்பிருவாங்க. அரசு வேலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து வருஷங்கள்தான் ஓடிப்போச்சு. முன்னேற்றம் ஏதும் ஏற்படலை. இப்போ ஹெவி போட்டதுக்கு அப்புறம், ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவரா இருக்கேன். இது பத்தி நண்பர்கள்கிட்ட சொல்லி புலம்பிக்கிட்டு இருந்தேன். அப்படியே அதை பேனராக வெச்சிட்டாங்க. பேனர் வைத்த அடுத்த சில மணி நேரத்துலயே அதை அங்கேருந்து யாரோ அகற்றிட்டாங்க.
என்னை மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிஞ்சு பல இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாம இருக்காங்க. எனக்கும் வேலை கொடுக்கணும். அவங்களுக்கும் வேலை கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார்.
**-ராஜ்**�,”