டெல்லி வன்முறை தொடர்பாக பாப்புலர் ஃபிராண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஷாகின் பாக் மற்றும் கிழக்கு டெல்லி ஆகிய பகுதிகளில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இதனிடையே மற்றொரு தரப்பினர் சிஏஏவுக்கு ஆதரவாகப் பேரணி நடத்தினர். கடந்த மாதம் 23ஆம் தேதி சிஏஏ ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. 4 நாட்கள் நீடித்த இந்த வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வன்முறை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா வன்முறையின் போது மக்களைத் தூண்டிவிடும் வகையில் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 12)பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் டெல்லி மாநில தலைவர் பர்வேஸ், செயலாளர் இலியாஸ் ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “டெல்லி வன்முறையின் போது மக்களைத் தூண்டுவதில் இவர்கள் இருவரும் பங்கு வகித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைக்கு நிதியளிப்பதில் இவர்களின் பங்கு வெளிப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
**-கவிபிரியா**�,