புதிய மோட்டார் வாகன சட்டம்: தமிழகத்தில் அதிக அபராதம்!

Published On:

| By Balaji

புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, போக்குவரத்து விதி மீறல்களுக்கு முன்பு இருந்த அபராதத் தொகை முன்பை விடப் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த சட்டம், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டன என அதற்கான ரசீதுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி நாட்டிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக அபராத சலான்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப் பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் சில விதிகள் நடைமுறைக்கு வந்தபோது, செப்டம்பர் 1 முதல் 18 மாநிலங்களில் விதிகளை மீறியதாக ரூ .577 கோடி மதிப்புள்ள 38,39,406 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மொத்தம் 14,13,996 அபராத சலான்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தவகையில் தமிழகத்தில் தான் அதிகமாக புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 326 சலான்கள் வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் 4,81,378 சலான்கள், குறைந்தபட்சமாகக் கோவாவில் 58 சலான்களும் வழங்கப்பட்டுள்ளன என்று கட்கரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விதிக்கப்பட்ட அபராத சலான்கள் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ. 27,75, 81,250 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share