கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் வருகிற 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதனால் இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறியுள்ளார்.
கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடியில் வருகிற 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வந்திருந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ள இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இதுவரை 68,000 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இரு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு லட்சம் பேருக்கு வேலை கிடைக்க இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார்.
தற்போது வெளிநாடுகளுக்குச் சென்று அந்நிய முதலீடுகளைப் பெற்று திரும்பிய தமிழக முதலமைச்சர் அதன் மூலம் 14,000 பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் முன்களப் பணியாளராகப் பணியாற்றிய செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பிரச்சினையில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று உறுதியளித்துள்ளார்.
**- ராஜ்-**
.