டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் (ஜே.என்.யு) நேற்று ஜனவரி 5 ஆம் தேதி இரவு நடந்த தாக்குதல்களைக் கண்டித்து நாடு முழுதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமித் ஷா திங்களன்று டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜலுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “ஞாயிற்றுக் கிழமை பல்கலைக்குள் நடந்த வன்முறை தொடர்பாக பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் டெல்லி காவல்துறை, மறுபுறம், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கலவரம் மற்றும் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்தது.
பல்கலைக்குள் நேற்று இரவு முகமூடி அணிந்துகொண்டு தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி என்று புகார்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பு மறுத்துள்ளது. மேலும் ஏபிவிபி சார்பில், ‘ரெட் வையலன்ஸ்’க்கு எதிராக அமைதிப் பேரணி நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இந்த தாக்குதலுக்கு இடது சாரி மாணவர்களே காரணம் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். “இடது சாரி மாணவர்கள்தான் ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தை வன்முறைக் களமாக மாற்றியிருக்கிறார்கள்” என்று அவர் ஏ.என்.ஐ.க்கு பேட்டியளித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஜே.என்.யூ மாணவர் சங்கத்தின் (ஜே.என்.யு.எஸ்.யூ) தலைவர் ஆயிஷ் கோஷ் உட்பட 22 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு காவலர்கள், எய்ம்ஸ் மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவர் சங்கத்தினர், “இது இரு தரப்புக்கு இடையே நடந்த மோதல் அல்ல. மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்” என்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் முக்கிய கட்டமாக பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர், ஜே.என்.யு.வின் துணை வேந்தர் மமதலா ஜெகதீஷ் குமாரை நீக்குமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், “முகமூடி அணிந்த மர்ம நபர்களும், பல்கலைக் கழக நிர்வாகமும் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது பல்கலைக்கு நீண்டகாலமாக காவல்துறையினர் எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காததும் ஒரு காரணம். தற்போதைய துணைவேந்தரின் நிர்வாகத்தின் கீழ் பாரபட்சமற்ற விசாரணை நடக்க வாய்ப்பில்லை. எனவே அவரை முதலில் நீக்கிவிட்டே விசாரணையைத் தொடங்க வேண்டும்” என்று பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுபோன்று ஏற்கனவே இருமுறை குடியரசுத் தலைவருக்கு பேராசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
�,”