ஜார்க்கண்ட்: காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை!

Published On:

| By Balaji

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ஜெஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளின் தாக்கம் அதிகம் உள்ள ஜார்க்கண்டில் 5 கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களில் இன்று நடைபெற்றது. பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு படி, பாஜக 4 இடங்களில் வென்று 21 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் வென்று 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்) 5 இடங்களில் வென்று, 25 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதனையடுத்து மாநிலத்தின் தனிப் பெரும் கட்சியாக ஜெஎம்எம் உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஹேமந்த் சோரன் இருந்து வந்துள்ளார். பழங்குடியினரின் நிலங்களை அரசு மற்றும் தனியார் மேம்பாட்டுப் பணிகளுக்காக மற்றவர்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் சோட்டானக்பூர் குத்தகை சட்டம் மற்றும் சந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றை தற்போது முதல்வராக உள்ள ரகுபர் தாஸ் தலைமையிலான அரசு திருத்தியுள்ளது. இந்நிலையில் பழங்குடியினரின் உரிமைக்காக ஹேமந்த் சோரன் குரல் கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாகவே மாநிலத்தில் ஜெஎம்எம் கட்சிக்கு அதிகளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன.

தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள பாஜகவைச் சேர்ந்த முதல்வர் ரகுபர் தாஸ், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்க ஜார்க்கண்ட் ராஜ் பவனுக்குச் சென்றுள்ளார். அதேசமயத்தில் ஹேமந்த் சோரன் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

இதனிடையே, ஹேமந்த் சோரன் தனது இல்லத்தில் மகிழ்ச்சியுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , ”ஜார்க்கண்ட் மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும். நாளைக்குள், அனைத்து விஷயங்களும் இறுதி செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share