மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால்: அமைச்சர் எச்சரிக்கை!

Published On:

| By Balaji

தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் மருத்துவர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் மருத்துவர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குத் தமிழகத்தில் மருத்துவத் துறைக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்துக் கொண்டிருக்கும் நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு சில மருத்துவர்கள் திடீரென்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையின் போர்டிகோ முன் நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாகும்வரை உண்ணாவிரதம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சங்கத்துடன் (டிஎன்டிடிஏ) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் ஃபோக்டா என்ற மருத்துவ சங்க கூட்டமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவேண்டும். நியாயமான உயர்தர மருத்துவ சேவை ஏழை,எளிய மக்களுக்கு அவசியமானது. இதற்கு ஏற்படும் தடையை அரசு அனுமதிக்காது. பணிக்குச் செல்லக் கூடிய மருத்துவர்களைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பது ஏற்கக் கூடியதல்ல. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் இன்று பணிக்குத் திரும்பாவிட்டால் பிற்பகல் 2 மணிக்கு, பணிக்கு வராத மருத்துவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது அவர்கள் பணி முறிவில் இருப்பதாகக் கருதப்படும். அவர்களது பணியிடங்களுக்குப் புதிதாக மருத்துவர்களைச் சேர்க்க அரசு தயங்காது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். தேவையெனில் அவர்கள் இந்த பணியிடங்களுக்கு நிரப்பப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவர்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா ஆந்திரா போன்ற மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மருத்துவத் துறையில் தமிழகத்தில் நிறைவான ஊதியம் மற்றும் பணி உயர்வை வழங்கி வருகிறோம் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் பேச்சு குறித்து ஃபோக்டா ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சரின் பேச்சு வேதனையையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அரசு எங்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும். எங்கள் போராட்டம் அரசுக்கும் மக்களுக்கும் எதிரானது அல்ல. வேலைக்குச் செல்லும் மருத்துவர்களை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை. அவசர சிகிச்சை, காய்ச்சல் பிரிவுகளில் கையெழுத்துப் போடாமல் வேலை பார்த்து வருகிறோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்”என்று தெரிவித்துள்ளார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share