]நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம் ஏன்?

Published On:

| By Balaji

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கைத் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த நீதிபதி பி.என்.பிரகாஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு, வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட் பாரதிதாசனை நியமித்தது, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவிட்டது, வழக்கை சிபிஐசிடிக்கு மாற்றியது என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை 6 முதல் நீதிபதிகள் விசாரிக்க உள்ள வழக்கு விபரங்கள் நீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், பி.என்.பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றவியல் முறையீட்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான மேல்முறையீடுகள் உட்பட) மனுக்களை விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நிர்வாக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்கள் ஆகியவற்றை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் அவர் ஏன் மாற்றம் செய்யப்பட்டார் என்று சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து விசாரித்ததில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பணியாற்றும் நீதிபதிகள் சுழற்சி முறையில் 3 மாதத்துக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவார்கள். அந்த வழக்கமான நடைமுறையில் தான் தற்போது நீதிபதி பி.என்.பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி பி.என்.பிரகாஷுக்கு கடந்த மே மாதமே இந்த சுழற்சிமுறை பணி மாற்றத்துக்கான 3 மாத காலக்கெடு முடிந்துவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு, மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டு காணொலிக் காட்சி மூலம் விசாரணை ஆகிய நடவடிக்கைகள் காரணமாக அவர் மாற்றம் செய்யப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்று நீதித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுபோன்று, நீதிபதிகளுக்கான போர்ட்போலியோவும் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படும். முன் ஜாமீன் மனுக்கள், ஆட்கொணர்வு மனுக்கள், ரிட் மனுக்கள், குற்றவியல் வழக்குகள், பொது நல வழக்குகள் என்ற அடிப்படையில் துறை ரீதியாகப் பிரிக்கப்பட்டு வழக்குகள் ஒதுக்கப்படும். அதனடிப்படையில் தற்போது சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் நீதிபதி புகழேந்தியும் மாற்றப்படலாம். இது நீதிமன்றத்தின் நிர்வாக ரீதியான நடவடிக்கையே தவிர இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்றும் உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share