ஹரியானா தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை நோக்கிச் செல்லும் நிலையிலிருக்க, மாநில முதல்வர் மனோகர் கட்டார் அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமை கோருகிறார்.
ஹரியானா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பாஜகவும் காங்கிரஸும் 90 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. இந்த தொகுதிகளில் இறுதியாக 1,169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்திய தேசிய லோக் தளம் 81 தொகுதிகளிலும் மீதமுள்ள தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளமும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 46, பகுஜன் சமாஜ் 87, ஸ்வராஜ் இந்தியா 27 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
இந்நிலையில், இன்று காலை முதல் எண்ணப்பட்ட வாக்குகளில் பிஜேபி 39 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
தேர்தலுக்குப் பிறகான வாக்குக் கணிப்புகள் மனோகல் லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்தன. ஆனால், தற்போது நிலவியுள்ள பின்னடைவு காரணமாக தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஹரியானா பாஜக தலைவர் சுபாஷ் பராலா பதவி விலகி உள்ளார் என மதியம் செய்திகளில் வெளியாகின. ஆனால், இதனை பராலா முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், “தேர்தலில் பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து கட்சியின் பாஜக மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியானது உண்மைக்கு புறம்பானது. தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறேன். ராஜினாமா செய்ததாக கூறும் தகவல் பொய்யானது” என்றார்.
ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் ஜே.ஜே.பி.,யின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**ஜே.ஜே.பியை நாடும் காங்கிரஸ்**
முன்னதாக ஜே.ஜே.பி கட்சியை காங்கிரஸ் அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் துஷ்யந்த் சவுதாலா எந்தவித உத்திரவாதமும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபந்திர ஹூடா, துஷ்யந்த் சவுதாலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இன்று மாலை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இழுபறியான நிலை ஏற்படும் சூழலில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க காங்கிரஸ் முயன்று வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் பதவியை துஷ்யந்த் சவுதாலாவுக்கு வழங்க காங்கிரஸ் முன் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேந்தர் ஹூடா கூறியதாவது:
“ஹரியானா மக்கள் பாஜகவை நிராகரித்து விட்டார்கள். 5 ஆண்டுகால ஆட்சியில் பெரும் இன்னலை சந்தித்த ஹரியானா மக்கள் எதிர்க்கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியுள்ளார். ஹரியானாவை பொறுத்தவரை துஷ்யந்த்தான் தற்போதைய ‘கிங் மேக்கர்’.
அதே சமயம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. பாஜகவுக்கு சுயேட்சைகள் ஆதரவு போதுமானதாக உள்ளது. இதனால், அக்கட்சி சுயேட்சைகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மனோகர் லால் கட்டார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார்.
�,