நிவேதிதா லூயிஸ்
தமிழகத்தின் முதல் கிறிஸ்துவ பெண் பரத நாட்டிய கலைஞர் அகிலாமணி திருமணத்துக்குப் பின் நடனத்தைத் தொடர்ந்தாரா? அவருக்கு நடனம் சொல்லிக் கொடுத்த குரு யார்? இந்தத் தேடல்களில் மேலும் பல சுவாரஸ்ய உண்மைகள் கிடைத்தன.
**திருமணத்துக்குப் பின்…**
நடன உலகில் கோலோச்சிக்கொண்டிருந்த அகிலாவுக்கு அவரது 18ஆவது வயதில், தஞ்சையைச் சேர்ந்த ஜார்ஜ் டேவிட் சிகாமணி என்ற பொறியாளருடன் 13.09.1945 அன்று திருமணம் நடைபெற்றது. கல்லூரிப்படிப்பு படிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எஃப்.ஏ. படித்துக் கொண்டிருக்கும்போது நடன நிகழ்ச்சிகளை அவர் நடத்திவந்திருக்கிறார் என்று செய்தித்தாள்கள் சொல்கின்றன. 1944க்குப் பிறகு அவர் நடன நிகழ்ச்சிகள் செய்த தரவுகள் இல்லை.
திருமணத்துக்குப் பின் கணவர் ஜார்ஜுடைய பணியின் நிமித்தம் நாட்டின் பல இடங்களில் அகிலா வசிக்க நேர்ந்தது. 1946ஆம் ஆண்டு தம்பதிக்கு முதல் மகள் கல்பனா பிறந்தாள். மனைவியின் நடனத்துக்கு கணவர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், உடல்நலமின்றி அல்லலுற்ற மூத்த மகளை சரிவர கவனிக்க வேண்டும் என்பதால் அகிலா நடனத்தைக் கைவிட்டார் என்று மகள் கீதா தெரிவிக்கிறார்.
ஆனால், அவரது உறவினரான திருமதி டாலி சாமுவேல், புகுந்த வீட்டினர் பெரிதாக அகிலா மேடைகளில் ஆடுவதை ரசிக்கவில்லை என்று சொல்கிறார். பிலாய் ஸ்டீல் பிளான்ட் பகுதியில் அகிலா வசித்தபோது, அவருடன் அங்கு வசித்த உறவினர் டாலி. பழகுவதற்கு இனிய, பொறுமையான, அழகிய பெண் அகிலா என்று சொல்லும் டாலி, “ருசியாக சமைக்கக் கூடியவர், தையல் வேலைப்பாடுகள் செய்யத் தெரிந்தவர், நல்ல ஹோம் மேக்கர்” என்றும் அகிலாவைப் பாராட்டுகிறார்.
ஆனால், திருமணத்துக்கு முந்தைய தன் கலைத்துறை வாழ்க்கை குறித்து ஒரு நாளும் அகிலா தன்னிடமோ, வேறு யாரிடமோ பேசியதில்லை என்றும் சொல்லி வியக்கிறார். தன் கடந்தகால கலைத்துறை வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் அகிலா பேசாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை. ஆனால் மகள் கீதாவுக்கும், உறவினர் காஞ்சனாவுக்கும் அகிலா பின்னாளில் நடனம் சொல்லித் தந்திருக்கிறார்.
**லாகூர்-தமிழ்நாடு: காப்பாற்றிய சிலுவை**
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது தன் அம்மா லாகூரிலிருந்து குழந்தைகளுடன் தப்பி வந்ததை கீதா விவரிக்கிறார். “விடுதலைக்கு முந்தைய இந்தியாவின் பல பகுதிகளில் அம்மா அப்பாவுடன் வசித்திருக்கிறார். இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது லாகூரில் அம்மா இருந்திருக்கிறார். பிரிவினையின்போது நிகழ்ந்த வன்முறையிலிருந்து தன்னையும் குழந்தைகளையும் காத்துக்கொள்ள லாகூரிலிருந்து ரயிலில் தமிழகம் பயணமானார். அப்போது தன் ஆடைக்கு மேல் பெரிய சிலுவையை வைத்து தைத்துக்கொண்டார். பார்த்த உடனே கிறிஸ்துவப் பெண் என்று தெரிய வேண்டும், அது தன்னையும் மூன்று குழந்தைகளையும் பாதுகாக்கும் என்று அம்மா நம்பியிருக்கிறார்.
அப்பா ரயில்வே துறை, பிலாய் தொழிற்சாலை, டெல்லி என்று பல இடங்களுக்கு மாறிக்கொண்டே இருந்தார். ஓய்வு பெற்ற பிறகு தான் குடும்பம் தமிழகத்துக்குத் திரும்பியது. சென்னை அண்ணா நகரில் வசித்தார்கள். வேலூர் சி. எம். சி. கல்லூரியில் மருத்துவம் படித்தேன், முடித்ததும் இங்கிலாந்து சென்றுவிட்டேன்” என்று கீதா சொல்கிறார்.
**அம்மா-நடனக் கலைஞர்**
“அம்மா என்பதால் அவரை அந்த இடத்தில் வைத்து மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அவரை ஒரு நடனக் கலைஞராக நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. எல்லா அம்மாவும் போல என் அம்மாவும் மிகவும் அன்பானவர், உறவினர்கள் அனைவர் மீதும் அதே அன்பை செலுத்தியவர். குடும்பம் குறித்து அதிக அக்கறை கொண்டவர். என் மூத்த சகோதரி சற்று உடல்நிலை சரியில்லாதவர் என்ற காரணத்தால் அம்மாவின் கவனம் முழுக்க முழுக்க குடும்ப நலன் பற்றியே இருந்தது” என்று சொல்கிறார் மகள் கீதா.
40 வயதிலேயே அகிலாவை புற்றுநோய் தாக்கியது என்று கீதா சொல்கிறார். அப்போது சென்னையில் இருந்த அகிலா துணிவுடனே இருந்தார் என்று அவரது உறவினர் டாலி சொல்கிறார். “வேலூரில் நாங்கள் அப்போது வசித்து வந்ததால், சி. எம்.சி. மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்தவர் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். இன்னும் தீவிர பக்தியுடன் அப்போது இருந்தார். என் மகள் பிறந்தநாளுக்கு நான் செய்த கேக்கை விரும்பி உண்டார். நான் சமையல் கலை நூல் ஒன்றை எழுதியிருக்கிறேன். என் சமையல் திறனை பட்டை தீட்ட எனக்கு அவர் உதவியிருக்கிறார்” என்று டாலி நினைவுகூர்கிறார். சிகிச்சை பலனளிக்காமல் 05.05.1979 அன்று, தன் 52ஆவது வயதில் அகிலா இறந்துபோனார். அம்மாவின் வாழ்க்கையின் மறைந்து போன பக்கங்களை நினைவூட்டும் பொக்கிஷங்களான செய்தித்தாள்கள், தங்கப்பதக்கங்களை இங்கிலாந்தில் தன்னுடன் வைத்திருக்கிறார் மகள் கீதா.
**அகிலாவின் குரு யார்?**
மூன்று மாதத் தொடர் உரையாடல், பலருடன் நேர்காணல் என்று முயன்றும் அகிலாவுக்கு நடனம் சொல்லித்தந்த குரு – நட்டுவனார் யாரென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. கிறிஸ்துவப் பெண் பரதமாடுவது அதிசயம் என்றால், அவருக்கு துணிவுடன் கற்றுத்தந்த நட்டுவனார் – அன்றைய சமூகக் கட்டமைப்பில் எவ்வளவு எதிர்ப்பை சந்தித்திருக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவர் செய்ததும் சாதனை தான். அவர் பெயர் ஏதோ பிள்ளை என்று மட்டும் நினைவிருக்கிறது, சேலத்தில் அம்மாவின் வீட்டுக்கே வந்து கற்றுத் தருவார் என்ற தகவலை மட்டும் கீதா நினைவுகூர்ந்தார். அவர்களது உறவினர்கள் யாருக்கும் நட்டுவனாரின் பெயர் நினைவில்லை.
சமீபத்தில் தன் அம்மாவின் நடனப் படங்கள் கொண்ட ஆல்பத்தில் பழைய புகைப்படங்களைத் தேடும்போது, குடும்ப நபர்களல்லாத இரு நபர்கள் உள்ள படம் ஒன்று பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதை கண்ட கீதா, அதன் முக்கியத்துவம் புரிந்து அதைப் பகிர்ந்தார். தன்னிடமிருந்த அம்மாவின் மொத்த படத் தொகுப்பிலும் இவர்கள் இருவரும்தான் வேற்று நபர்கள் என்று கீதா சொல்கிறார். அங்கவஸ்திரம் அணிந்து கம்பீரமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் இளைஞர் ஒருவரும், அவர் அருகே நின்று கொண்டிருக்கும் மற்றொரு இளைஞரும் யாரென்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பிரபல நடனக் கலைஞரும், நட்டுவனார்கள் குறித்து ஆய்வுகள் செய்துவருபவருமான ஸ்வர்ணமால்யாவுக்கு அந்த புகைப்படத்தை அனுப்ப, அவர் தெரிந்த வட்டத்தில் விசாரித்து பத்தே நிமிடத்தில் இருவரையும் அடையாளம் கண்டுபிடித்துச் சொன்னார். நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபர் பிரபல கர்னாடக இசைப் பாடகர் நாராயணசாமிப் பிள்ளை. புகழ்பெற்ற தஞ்சை நால்வரின் நேரடி வாரிசான பிச்சைப் பிள்ளை நட்டுவனாரின் மகன். நின்று கொண்டிருப்பர் திருத்துறைப்பூண்டி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையாக இருக்கக் கூடும் என்றும் தகவல் தந்தார்.
“நட்டுவனார்களிடம் நடனம் கற்றுக்கொள்ளும் மாணவிகளுக்குச் சில நேரங்களில் அவர்கள் முதிர் வயது காரணமாக நேரடியாக சென்று வகுப்புகள் நடத்த முடியாது. நானே சரசாம்மாவின் மாணவிகளுக்கு கோவையில் சென்று நடனம் கற்றுத்தந்திருக்கிறேன். அவர்கள் தங்கள் குரு என்று சரசாம்மாவைத் தான் சொல்வார்களே தவிர, என்னைச் சொல்வதில்லை. இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். பிச்சைப் பிள்ளை நட்டுவனார் மகன் நாராயணசாமிப் பிள்ளை தந்தையின் பெயர் கொண்டு நடனம் சொல்லித் தந்திருக்க வேண்டும். நடனத் துறையில் இது இயல்பு தான்.
கிட்டப்பா பிள்ளையுடன் பின்னாள்களில் நிறைய கர்னாடக இசைக் கச்சேரிகளை நாராயணசாமி பிள்ளை செய்திருக்கிறார். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் நட்டுவனார் குடும்பத்தினர் ஆடல், பாடல் இரண்டிலும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதால், நாராயணசாமிப் பிள்ளை நடனம் சொல்லிக்கொடுத்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் ஆடியது தஞ்சைப் பாணி என்பதால், அகிலாவும் அதைத் தான் ஆடியிருக்க வேண்டும்” என்று விளக்குகிறார். தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியாரின் வழித்தோன்றலுக்கு தஞ்சை நால்வரின் வழித்தோன்றல் நடனம் சொல்லித்தந்திருக்கிறார். இது தான் நம் தமிழகம்.
மீண்டும் கீதாவைத் தொடர்பு கொண்டு அவரது அம்மாவின் குரு நாராயணசாமி பிள்ளையாக இருக்கக் கூடும் என்று சொல்ல, அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. “ஆமாம், இப்போது எனக்கு அந்தப் பெயர் நினைவுக்கு வருகிறது. என் சிறு வயதில் அம்மா நாராயணசாமிப் பிள்ளை பெயரை அடிக்கடி சொல்வார்” என்று குதூகலிக்கிறார். “அம்மாவின் கதையை யாராவது எழுத மாட்டார்களா என்று பல ஆண்டுகளாகத் தேடித்தான் உங்களைத் தொடர்பு கொண்டேன்” என்று சொல்கிறார்.
கடைசியாக, “நாங்கள் கிறிஸ்துவர்கள் தான், ஆனால் தமிழர்கள். இசை, நடனம், இலக்கியம் என்று தமிழ்ப் பண்பாட்டின் எல்லாக் கூறுகளும் எங்களிடமும் உண்டு. இதை உங்களுக்கே உரிய முறையில் எடுத்து எழுதுங்கள்” என்று ஆங்கிலத்தில் கோருகிறார் வேதநாயகம் சாஸ்திரியாரின் வழித்தோன்றலான கீதா மணி. இதை நான் வேறு எப்படிச் சொல்ல? மறந்து போன மாகாணத்தின் முதல் கிறிஸ்துவப் பெண் நடனக் கலைஞர் அகிலாமணியை நினைவுபடுத்தியதற்கு, நாம்தான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். கலைக்கு மதமில்லை, என்றும்!
**கட்டுரையாளர் குறிப்பு**
நிவேதிதா லூயிஸ்
சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த “முதல் பெண்கள்” என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் “ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை” என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.
**தகவல்கள் நன்றி:**
கீதா மணி, இங்கிலாந்து
காஞ்சனா லான்செட், ஜெர்மனி
டாலி சாமுவேல், சென்னை
ஸ்வர்ணமால்யா, சென்னை
[கலைக்கு மதமில்லை: மதராஸ் மாகாணத்தின் முதல் கிறிஸ்துவ பரதக் கலைஞர் – அகிலாமணி ஸ்ரீனிவாசன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2021/04/18/11/madras-state-first-christian-women-baratha-artist-akilamani-srinivasan)
�,”