விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் ஒருவர் பரிசு வழங்கி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, கடந்த 14ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். ஆங்கில வழி கல்விமுறை அதிகரிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2021-2022 கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட புத்தகங்களுடன் தனது செலவில் ரூபாய் ஆயிரம் பணத்தை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் வழங்கினார்.
இதுகுறித்து தலைமையாசிரியர் ஜெயக்குமார் கூறுகையில், “ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் செய்கிறது. அதனால் என்னால் முடிந்ததை செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறேன்.
கடந்த ஆண்டு செல்போன் கொடுத்த நிலையில், தற்போது ஆயிரம் ரூபாய் கொடுத்து வருகிறேன். இந்த செயல் எனக்கு மகிழ்ச்சி தருவதனால், தொடர்ந்து செய்து வருகிறேன்” என்று கூறினார்.
**-வினிதா**
�,