டீசல் தீர்ந்ததால் நடுரோட்டில் திருடிக்கொண்டு சென்ற ஜேசிபி வண்டி நின்றிருந்ததால் சிக்கியுள்ளார் ஒருவர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே உள்ள முத்தலாடம்பட்டி பகுதியில், நாமக்கல் ஈச்சங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில்ராஜா என்பவர் நான்கு ஜேசிபி வாகனங்களை வைத்து வாடகைக்கு விடும் தொழில் மேற்கொண்டு வருகிறார்.
சாலைப் பணிகள், விவசாய நிலத்தில் வேலை எனப் பல்வேறு வேலைகளுக்கு ஜேசிபியை வாடகைக்கு விட்டுவந்துள்ளார். இந்த நிலையில், வழக்கமாக நிறுத்தப்படும் இடத்திலிருந்த நான்கு ஜேசிபி வாகனங்களில் ஒன்றை மட்டும் காணவில்லை. அதைக்கண்ட செந்தில்ராஜா, அதிர்ச்சியுடன் அக்கம்பக்கக்கத்தில் விசாரித்திருக்கிறார். ஆனால், யாருக்கும் அவரது ஜேசிபி பற்றி தகவல் தெரியவில்லை.
இதனால், உடனடியாக தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் செந்தில்ராஜா புகார் அளித்தார். அவர் அளித்த புகார் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், கரூர் – திருச்சி சாலை மற்றும் கரூர் – திண்டுக்கல் சாலை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கரூர் – திருச்சி சாலையில் ஏமூர் மேம்பாலம் அருகே ஜேசிபி வாகனம் ஒன்று நிற்பதை போலீஸார் கண்டனர்.
அதன் அருகாமையில் சென்று விசாரித்தபோது, ‘வாகனத்தில் டீசல் தீர்ந்துவிட்டது. டீசல் வாங்க ஆள் போயிருக்கிறது. டீசல் வந்ததும், வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறேன்’ என்று தனது வாகனம் போலவே பேசியிருக்கிறார். ஆனால், அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அந்த ஜேசிபி இயந்திரம் செந்தில்ராஜா வாகனம் என்பது தெரியவந்தது.
மேற்படி வாகனத்தை ஓட்டிவந்த விக்னேஷ்குமார் என்ற அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியதால், சந்தேகமடைந்த தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார் காவல் நிலையத்துக்கு விக்னேஷ்குமாரை அழைத்துச் சென்று விசாரித்ததில், செந்தில்ராஜாவின் வாகனத்தைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டார்.
வாகனத்தை திருடிச் சென்ற விக்னேஷ்குமார் மீது தான்தோன்றிமலை காவல் நிலைய போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் 379 பிரிவின்படி வழக்கு பதிவு செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.
**- ராஜ்**
�,