}மூடப்பட்ட ஜெயலலிதா நினைவிடம்: சசிகலா வர தடையா?

Published On:

| By Balaji

பராமரிப்புப் பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகில் நினைவிடம் கட்டப்பட்டு கடந்த 27ஆம் தேதி திறக்கப்பட்டது. தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதைத் திறந்து வைத்தார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 2) இரவு 8 மணியளவில் பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் முடிந்த பிறகு பொது மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த திடீர் அறிவிப்புக்குப் பின்னணியில் சசிகலாவின் சென்னை வருகை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.

ஜனவரி 27ஆம் தேதி விடுதலை அடைந்துவிட்ட சசிகலா, ஜனவரி 31ஆம் தேதி பெங்களூரு மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். வெளியே வரும்போதே தனது காரில் அதிமுக கொடியை சசிகலா கட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் தனக்குள்ள உரிமையைக்கோரும் வகையிலேயே அவர் காரில் அதிமுக கொடியைக் கட்டியிருந்தார்.

இந்த நிலையில் சென்னைக்குள் வந்ததும் நேரடியாக அவர் ஜெ. நினைவிடத்துக்குத்தான் செல்வதாக திட்டமிட்டிருந்தார். 2017ஆம் ஆண்டு சிறை செல்வதற்கு முன்னர் அவர் ஜெ. நினைவிடத்தில் கையை ஓங்கியடித்து சபதம் செய்திருந்தார். விடுதலையாகி மீண்டும் அதே இடத்துக்கு வரவே அவர் திட்டமிட்டுள்ளார்.

சசிகலா வருகையைத் தடுக்கும் வகையில்தான் முதல்வர் வசமிருக்கும் பொதுப்பணித்துறை மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதாக அதிமுகவிலேயே பேச்சு எழுந்துள்ளது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share