அமமுகவை கட்சியாக பதிவு செய்வதை அதிமுக ஏன் எதிர்க்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அமமுகவை பதிவு செய்யும் பணிகளில் தினகரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. ஆனால், அமமுகவை கட்சியாகப் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு அளித்தது. அதில், “ஜெயலலிதா புகைப்படம், கொடிகளை பயன்படுத்தக் கூடாது. அம்மா என்னும் பெயர் ஜெயலலிதாவைத்தான் குறிக்கிறது. எனவே அதனை பயன்படுத்தக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த 17ஆம் தேதி இதுதொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்தபோது, அதிமுகவின் ஆட்சேபத்துக்கு உரிய விளக்கம் அளித்ததாகவும், விரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டுவிடும் என்று அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை நந்தனத்தில் நேற்று (அக்டோபர் 25) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அமமுகவை பதிவு செய்வதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “அமமுக என்பது ஒரு கட்சியே கிடையாது. அது ஒரு லெட்டர் பேடு கட்சி. அதனை தற்போது பதிவு செய்ய தேர்தல் ஆணையம் சென்றுள்ளார் தினகரன். ஜெயலலிதாவின் பெயரை தங்களது கட்சிக்கு வைக்க அவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது. அவர்கள் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். எனவே, ஜெயலலிதாவின் பெயரை வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதேபோல ஜெயலலிதாவின் படத்தை அமமுகவின் கொடியில் எவ்வாறு பொறிக்கலாம். தேவையென்றால் தியாகத் தலைவி என்று அவர்கள் கூறும் சசிகலாவின் படத்தை கொடியில் பொறித்து கட்சி ஆரம்பித்துக்கொள்ளட்டும்” என்றும் காட்டமாக பதிலளித்த ஜெயக்குமார்,
ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக ஒற்றுமை உணர்வோடு நடைபோட்டு வருவதாகவும், தினகரன் தரப்பிலிருந்து பலரும் அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள் எனவும், சசிகலா குடும்பத்தைத் தவிர யார் வந்தாலும் அவர்களை இணைத்துக்கொள்வது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
முதல்வருடனான புகழேந்தியின் சந்திப்பு குறித்து பேசிய ஜெயக்குமார், “முதல்வரிடம் வாழ்த்து பெறுவதற்காக புகழேந்தி சென்றுள்ளார். புகழேந்தி முதல்வரை சந்தித்ததில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 24ஆம் புலிகேசி புகழேந்தி என்று தினகரன் கூறினால் 23வது புலிகேசி தினகரனா? அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என்றும் சாடினார்.
�,