தமிழ்நாட்டில் பாயசத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் ஜவ்வரிசியை, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கஞ்சியும் தயாரித்து உண்கின்றனர். கேரளத்திலும் ஜவ்வரிசியைச் சாதம்போல் செய்து உண்பது வழக்கம். பொதுவாகவே காலை உணவு சாப்பிடுவதை தவிர்ப்பவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் போன்றவர்களுக்கு அல்சர் பாதிப்பு சுலபத்தில் ஏற்படும். இத்தகைய அல்சர் புண்களை ஆற்றுவதில் ஜவ்வரிசி மிகச் சிறப்பாக செயல்படும். அதற்கு இந்த ஜவ்வரிசி மோர்க்கஞ்சி உதவும்.
**என்ன தேவை?**
நைலான் ஜவ்வரிசி – 50 கிராம்
நீர்த்த மோர் (லேசாக புளித்தது) – 200 மில்லி
கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
மோர் மிளகாய் – 2
நெய் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள், உப்பு – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியைக் களைந்து அது மூழ்கும் அளவு நீர்விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பின்னர் அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, நீர்விட்டு அடி பிடிக்காதவாறு வேகவிட்டு ஆறவிடவும். பிறகு இதனுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கஞ்சி போல விளாவவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, மோர் மிளகாய் சேர்த்து வறுத்து, கடுகு, சீரகம் போட்டுப் பொரியவிட்டு, ஜவ்வரிசி கலவையில் சேர்த்துப் பரிமாறவும்.
நேற்றைய ரெசிப்பி: **[ஜவ்வரிசி தயிர் போண்டா!](https://minnambalam.com/public/2021/01/15/1/javvarisi-thayir-ponda)**�,