Wஅழகுக்குள் மறைந்திருந்த ஆபத்து!

Published On:

| By Balaji

பேரழகு சில நேரங்களில் மிகப்பெரிய ஆபத்திற்கு முன்னோடியாகக்கூட இருக்கலாம் என்று கூறுவார்கள். அதனை உண்மை என்று நிரூபித்து உதாரணமாக மாறியிருக்கிறது ஜப்பான்.

அனைத்து ஊடகங்களும் மாமல்லபுரத்தை நோக்கி தங்கள் கேமராக்கண்களைத் திருப்பி பிரதமரின் தமிழக வருகையையும், சீன அதிபருடனான சந்திப்பையும் செய்தியாக்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அடுத்த பேரழிவின் அடையாளமாக மாறிக் கொண்டிருந்தது ஜப்பான். பிரதமரின் வருகையை எதிர்த்தும் ஆதரித்தும் ட்விட்டரில் ட்ரெண்டான கோபேக் மோடி, டோண்ட் கோபேக் மோடி ஹேஷ்டேக்களைத் தாண்டி, வலியுடன் ட்ரெண்ட்டாகி வருகிறது ‘ப்ரே ஃபோர் ஜப்பான்’ ஹேஷ்டேக்.

நிறங்களைத் தூவி அழகுற எடிட் செய்யப்பட்டது போன்று வானம் முழுதும் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ஆனால் அதற்குள் மிகுந்து நிற்கும் அழகை ரசிக்க முடியாமல் செய்துவிட்டது அதன் பின்னால் ஒளிந்திருந்த ஆபத்து. வானம் இவ்வாறு பிங்க் நிறத்தில் மாறுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. மிகப் பெரிய சூறாவளிக்கு முன்னதாக இயற்கை தரும் முன்னறிவிப்பு தான் இது. ஜப்பான் வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், ஹசியோஜிமோ ஐஸ்லாண்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து 320 கிலோ மீட்டர் தூரத்தில் மிக அபாயகரமான சூறாவளிப் புயல் மையம் கொண்டிருப்பதாகவும் அது கரையைக் கடக்கும் போது 160 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் எச்சரித்திருந்தது.

இதன் காரணமாக பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான விமானங்களும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இந்த விவரங்கள் ஜப்பான் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 1958 ஆம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவு வாங்கிய கனோகவோ சூறாவளிப்புயல் வீசிய போதும் இதே போன்று வானம் நிறமாறிக் காட்சியளித்தது. மீண்டும் அதே போன்றதொரு பேரழிவு ஏற்படுமோ என்று மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் சூறாவளி கரையைக் கடந்த போது நடைபெற்ற நிகழ்வுகளின் கோரக்காட்சிகளை வீடியோ எடுத்தும் சிலர் டிவிட்டரில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த பெரும் சூறாவளியில் பலரது வீடுகளும் உடைமைகளும் சேதமடைந்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share