அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று (ஜனவரி 16) உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதலில், கோயில் காளைக்கு முதல்வரும், துணை முதல்வரும் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கொடியசைத்துத் தொடங்கப்பட்ட நிலையில், வாடிவாசலிலிருந்து கோயில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
அதிக காளைகளைப் பிடிக்கும் சிறந்த வீரருக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு காரும், களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு காரும் பரிசாக வழங்கவுள்ளனர். மேலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும், பிடிபடாமல் பாய்ந்தோடும் காளையின் உரிமையாளருக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்படவுள்ளன.
இதனிடையே விழா மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது வாழ்த்துரையில் துணை முதல்வர் ஓபிஎஸுக்கு ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர்“ உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தையும் காக்கும் விதமாக, ஜல்லிக்கட்டை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசுதான்” என்று குறிப்பிட்டார்.
**-பிரியா**�,