மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ரசித்து வருகிறார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது வரை 350க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டுள்ளன. காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் காளையும், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் காளையும் வெற்றி பெற்றது. இதுதவிர வெற்றிபெற்ற காளையை அடக்கிய மாடுபிடி வீரர், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு உதயநிதி தங்க மோதிரம் அணிவித்தார்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண ராகுல் காந்தி தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக அவனியாபுரத்துக்குச் சென்றார்.
தமிழர்களின் பாரம்பரிய வீரத்தை காணும் தலைவர் #ராகுல்_காந்தி.#RahulinThamizhVanakkam pic.twitter.com/k5Z6spkW33
— Vijhai shekar (@Vijhaishekar) January 14, 2021
போட்டி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வி.ஐ.பி. மேடையில் அமர்ந்து அவர் போட்டியை ரசித்து வருகிறார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி
ஸ்டாலின் ஆகியோரும் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே ராகுல் சார்பில் இரு இருசக்கர வாகனங்கள் இறுதியாக வெற்றி பெறுபவர்களுக்கு விழா குழுவினர் வழங்குவார்கள் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்தார்.
இதனிடையே பேசிய ராகுல் காந்தி, “என்னை விழாவுக்கு அழைத்த அனைவருக்கும் நன்றி. இந்த அற்புதமான தமிழ் விழாவைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியில் கலந்துகொள்ளும் இளைஞர்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி முறையாக விழா குழுவினர் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இது ஒரு அழகான அனுபவம். தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை, பாரம்பரியத்தைக் காக்க வேண்டியது என் கடமை. தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் பரப்பச் செயல்படுபவர்களைப் பாராட்டுகிறேன். தமிழக மக்களோடு நான் என்றும் நிற்பேன். தமிழ்க் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை கற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறேன். அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துகள். விழாவில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி ” என்று தெரிவித்தார்.
இதையடுத்து இளைஞர்கள் ராகுல் காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். தொடர்ந்து உற்சாகமாக ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
**-பிரியா**�,”