நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு: அமித் ஷா

Published On:

| By Balaji

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு செயல்படுத்தப்படும் என மாநிலங்களவையில் அமித் ஷா கூறினார்.

நாடாளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர், நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. மூன்றாவது நாளான இன்று, காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை குறித்த விவாதம், என்ஆர்சி பதிவேடு, சோனியா குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது, வாட்ஸ் அப் மூலம் வேவு பார்க்கப்படுவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன.

**காஷ்மீர்**

உள்துறை அமைச்சகம் இன்று, ஆகஸ்ட் 4 முதல் ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது 5,161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இதுகுறித்து பேசும்போது, காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை முடங்கியுள்ளதாக கூறினார்.

ஜம்மு-காஷ்மீரின் நிலைமை இயல்பு நிலையில் தான் இருக்கிறது என்று வலியுறுத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “‘ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலும் திரும்பி வருகிறது. லேண்ட்லைன் போன்கள் மற்றும் மொபைல் போன்கள் செயல்படுகின்றன. நீதிமன்றங்கள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. வாகனங்கள் இயங்கி வருகின்றன. மருத்துவ சேவையும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை’’ எனக் கூறினார்.

மேலும், “144 தடைச்சட்டப் பிரிவு ஜம்மு-காஷ்மீரில் இருந்து நீக்கப்பட்டது. மொபைல் மற்றும் இணையம் முக்கியமான வசதிகள் அவை, விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் பள்ளத்தாக்குக்கு மொபைலைக் கொண்டுவந்தது பிஜேபி தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது நாம் அதற்கு தான் முன்னுரிமை கொடுக்க முடியும். எல்லோருக்கும் தெரியும் அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீரின் நிலைமை பதட்டமாக உள்ளது. இணையத்தைப் பொருத்தவரை, அதன் மறுசீரமைப்பு சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

**தேசிய பாதுகாப்புச் சட்டம்**

அதன் பின்னர், கேள்வி நேரத்தின் போது தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமித் ஷா, “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும். அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும்.

தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான். நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) செயல்படுத்தப்படும். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்.

இந்திய குடிமக்களாக இருக்கும் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெறுவார்கள். மதரீதியாகப் பாகுபாடு காட்டப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்ஆர்சி என்பது வேறு, குடியுரிமை திருத்த மசோதா என்பது வேறு. அசாம் மாநிலத்தில் என்ஆர்சி செயல்படுத்தப்பட்டது. அதில் வரைவுப் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபட்ட மக்கள், தீர்ப்பாயத்துக்குச் சென்று முறையிட உரிமை இருக்கிறது.

வங்கதேசம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாகத் துன்புறுத்தல்களை அனுபவிக்கும் மக்கள் குடியுரிமை திருத்த மசோதாவின் கீழ் குடியுரிமை பெறுவார்கள். மக்களவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், தேர்வுக்குழுவும் ஒப்புதல் அளித்த பின்னும் மசோதா காலாவதியானது. இப்போது மீண்டும் மசோதா வர உள்ளது” எனக் கூறினார்.

**எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கல்**

காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா சோனியா காந்தி குடும்பத்திற்கு எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். “சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மத்திய அரசு எஸ்பிஜி பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட அந்தப் பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டும். சோனியா குடும்பத்தாருக்குத் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் ஆகிய 4 பேரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. பிரிவினைவாத அரசியலைத் தாண்டி, எஸ்பிஜி பாதுகாப்பை மீண்டும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்” எனக் கூறினார்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share