நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் நிலையில், படத்தின் இந்தி டப்பிங் பதிப்பை வெளியிடுவதற்கான காரணத்தை இயக்குநர் கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தின் சிட்டி மற்றும் வசீகரன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 2.0. இந்திய உட்பட சர்வதேச அளவில் பல நாடுகளில் வரும் நவம்பர் 29 அன்று வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாகிறது. இதில் இந்தி டப்பிங் பதிப்பை பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் வெளியிடுகிறார்.
2.0 படத்தைப் பற்றி திரை ஆர்வலர் பரத்வாஜ் ரங்கனின், ஃபிலிம் கம்பெனியன் சவுத் என்ற யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் “பாகுபலிக்குப் பிறகு பல படங்கள் என்னிடம் வந்தன. ஆனால் எல்லா படங்களையும் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாதே. எல்லா படங்களும் பாகுபலி போல பிரமாண்டமாக வெளியிடப்பட வேண்டும் என்றும் கட்டாயம் கிடையாது. பல நல்ல படங்கள் ஒரு குறிப்பிட்ட தரப்புக்கான படங்கள் மட்டுமே. அது இந்தியில் டப் செய்யப்பட்டால் நன்றாகப் போகுமா என்பதைச் சொல்ல முடியாது. ஆனால், பாகுபலி நன்றாகப் போகும் என்பது எனக்குத் தெரிந்தது, அதே போல 2.0 படமும் நன்றாகப் போகும் என்று எனக்குத் தெரிகிறது.
நல்ல படங்களை ரீமேக் செய்யலாம். ஆனால், எல்லா டப்பிங் படங்களுக்கும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஷங்கர் ஆகியோர் இருப்பதுதான் இந்தப் படம் நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையை எனக்குத் தருகிறது. ஷங்கர் – ரஜினி இணையின் முந்தைய படங்கள் சரியான வரவேற்பை இந்தியில் பெறாமல் போயிருக்கலாம். ஆனால், இது எந்திரன் படத்தின் தொடர்ச்சி. சிட்டி கதாபாத்திரத்தின் தொடர்ச்சி. சிட்டி கதாபாத்திரம் இங்கு அனைவருக்கும் பிடித்தது. படம் வெளிவந்தபோது அது ரொம்ப புதிய சிந்தனை என்பதால் அப்போது இங்கு வரவேற்பு பெரிதாக இல்லை. பட வெளியீடும் அவ்வளவும் பிரமாண்டமாக இல்லை.
ஆனால், எல்லோருக்கும் எந்திரன் பற்றி தெரியும். எந்திரன் (இந்தி டப்பிங் பதிப்பின்) தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டகாசமான டிஆர்பியைப் பெற்றுள்ளது. மேலும் 2.0 வில் அக்ஷய் குமார் இருக்கிறார். பாலிவுட்-கோலிவுட் பிணைப்பு இதில் வலுவாக இருக்கிறது. மேலும் இது பிரமாண்டமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பா 100 சதவிகிதம் படத்துக்கான தொடக்கம் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால் அதன் பின் படம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே அதன் வெற்றி இருக்கும். கண்டிப்பாகப் படம் ஓர் அற்புதமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இப்படியான படைப்பை இந்தியில் வெளியிடுவது எனக்குப் பெருமை” என்று கூறியுள்ளார்.�,