தகவல் பாதுகாப்பை உறுதி செய்யப் பயன்படுத்தப்படும் செயல்முறைகள் குறித்த முழுத் தகவல்களையும் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்துத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஸ்மார்ட் போன்களில் தகவல் பாதுகாப்பை உறுதி செய்ய நிறுவனங்கள் பயன்படுத்தும் செயல்முறைகள் குறித்த முழுத் தகவல்களையும் அரசிடம் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30 ஸ்மார்ட் போன் நிறுவனங்களிடம் இது குறித்த தகவல் கேட்டு மத்திய அரசு அணுகியது. சுமார் 24 நிறுவனங்கள் பதிலளித்துள்ளன. இந்தப் பதில்களை அரசு ஆய்வு செய்துவருகிறது. பாதுகாப்பான நடைமுறையில் செயல்படும் வகையில் ஸ்மார்ட் போன்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றனவா என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலளிப்பதற்குக் கூடுதலான கால அவகாசம் வேண்டுமென்றால், அதை அளிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவையான தகவல்களை வழங்காத நிறுவனங்களிடம் கூடுதலான தகவல்கள் கேட்டுப் பெறப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரிவான தரப்படுத்துதல், சோதனை மற்றும் தரச் சான்றளிப்பு அமைப்பால் இந்தப் பதில்கள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. சீனாவின் முன்னணி ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனங்களான விவோ, ஒப்போ, ஜியோனி, க்ஷியோமி போன்ற நிறுவனங்களிடம் பாதுகாப்பு செயல்முறைகள் குறித்துத் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஆப்பிள், சாம்சங் மற்றும் இந்திய நிறுவனங்களிடமும் தகவல் கோரப்பட்டுள்ளது.
�,