ஸ்டாலினுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி மனு அளித்துள்ளார்.
தேனியில் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றத்தை எப்படியோ சரிகட்டி, தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை அதிமுகவினர் பெற்றுள்ளார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
இதுதொடர்பாக தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திவாகர் நேற்று (ஏப்ரல் 1) அரசு தலைமை வழக்கறிஞரிடம் அளித்துள்ள மனுவில், “தேனியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.
ஸ்டாலினின் இந்தப் பேச்சு நீதிபதிகள் மீதும், நீதிமன்றம் மீதும் நேரடியாக குற்றம் சுமத்துவது போல் உள்ளதோடு, அதன் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. அது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 2சி-யின்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதால், ஸ்டாலினுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதியளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தையும், முரசொலி நாளிதழில் வந்த பத்திரிகை செய்தியையும் மனுவுடன் இணைத்துள்ளார்.
புகார் அளித்துள்ள திவாகர் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டபின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் முடிவெடுக்கவுள்ளார்.�,”