இந்தியர்களால் வெளிநாடுகளில் உள்ள வரிப் புகலிடங்களில் சேர்த்து வைக்கும் பணத்தின் அளவு 2013-17 ஆண்டுகளில் கணிசமான அளவுக்குக் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரு முதலாளிகளும் கருப்புப் பணத்தைப் பதுக்க நினைப்பவர்களும் வெளிநாடுகளில் ரகசியமாக, குறைந்த வரி கட்டுப்பாட்டுச் சட்டம் கொண்ட இடங்களில் சேமித்து (பதுக்கி) வைக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் தேக்கி வைக்கும் பணத்தின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடும் அளவுக்குக் குறைந்துள்ளதாக மத்திய அரசின் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது. *பேங்க் ஆஃப் இண்டர்நேஷனல் செட்டில்மெண்ட்ஸ்* வங்கி அமைப்பிடமிருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஐரோப்பாவின் *லூக்ஸெம்பெர்க்* நாட்டில் இவ்வாறு சேமித்து வைத்திருந்த வங்கியில்லாக் கடன் மற்றும் டெபாசிட் அளவு 2017ஆம் ஆண்டில் 11 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டில் இந்தத் தொகை 29 மில்லியன் டாலராக இருந்தது. அதேபோல, ஃபிரான்ஸ் நாட்டின் *ஜெர்ஸி*யில் இருக்கும் இந்தியர்களின் பணம் 261 மில்லியன் டாலரிலிருந்து 215 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 17.6 சதவிகிதம் சரிவாகும். அதேபோல இங்கிலாந்து நாட்டின் *இஸ்லே ஆஃப் மேன்* பகுதியில் இந்தியர்களின் டெபாசிட் பணம் 119 மில்லியன் டாலரிலிருந்து 72 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
இங்கிலாந்தில் 2.73 பில்லியன் டாலரிலிருந்து 1.85 டாலராகவும், ஃபிரான்ஸில் 419 மில்லியன் டாலரிலிருந்து 141 மில்லியன் டாலராகவும் இந்தியர்களின் பணம் குறைந்துள்ளது. கருப்புப் பணத்துக்கு எதிராக பணமதிப்பழிப்பு உள்ளிட்ட இந்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால்தான் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டுக்கே திருப்பிக் கொண்டுவரப்படுவதாக அரசு அதிகாரி ஒருவர் *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.�,