ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவும் நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் இது குறித்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் டிடிவி. தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீடியோ ஒன்றை நேற்று முன்தினம்(டிசம்பர் 20) வெளியிட்டார். இதுபோல் பல வீடியோக்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு ஒருநாள் முன்னதாக அவர் சிகிச்சை வீடியோவை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஆர்.கே நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர், வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் பன்னீர்செல்வம், சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். விசாரணை ஆணையத்தைக் களங்கப்படுத்தவும், அதன் செயல்பாட்டில் குறுக்கிடும் நோக்கத்துடனும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை ஆணையத்தின் புகாரின் படி அண்ணாசதுக்கம் போலீசார் வெற்றிவேல் மீது ஐபிசி 468, 471, 176, 177, 189 ஆகிய 5 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி வெற்றிவேல் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைச் சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று(டிசம்பர் 22) பிற்பகல் விசாரிக்கவுள்ளது.�,