Jவலைகடலின் நீர்க்குமிழிகள்!

Published On:

| By Balaji

சமூக வலைதளங்களும் நாமும் 12 – நவீனா

நகர்புறக் கல்லூரி ஒன்றில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவி கோடை விடுமுறையைக் கழிக்கத் தன் பாட்டி வீட்டுக்கு வருகிறாள். அது இன்டர்நெட் வசதி சரிவர இல்லாத குக்கிராமம். விடுமுறை முழுவதையும் பாட்டியுடனும் இதர உறவினர்களுடனும் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்குத் திரும்புகிறாள்.

கல்லூரி தொடங்கும் நாளன்று தனது நெருங்கிய தோழிகளைச் சந்தித்துப் பேசப்போகும் ஆர்வத்துடன் அவள் கல்லூரிக்குக் கிளம்பிச் செல்கிறாள். ஆனால், அங்கு அவளது நெருங்கிய தோழிகளோ அவளுடன் பேசுவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் புதியதாக ஒரு நட்பு வட்டத்தையும் உருவாக்கிக்கொண்டதை அவளால் ஊகிக்க முடிகிறது. இவ்வளவு நாள் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவரும் தன்னை விட்டுப் போய்விட்டார்கள் என்று அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவர்களின் போக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றத்துக்கான காரணம் என்ன என்கிற கேள்வியும் அவளுக்குள் முளைத்தது.

ஒரு தோழியிடம் விசாரித்தபோது, கோடை விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் சென்றதிலிருந்து, அவள் ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக்குகளை (Snapchat streaks) தக்கவைத்துக்கொள்ளத் தவறியதால் தோழிகள் அனைவரும் அவள் மேல் கோபமாக இருப்பதாகவும், தொடர்பிலிருந்த மற்றவர்களுடன் புதிய ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக்குகளை ஏற்படுத்திக்கொண்டதால் அவர்களுடைய நட்பு வட்டத்தில் இணைந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறாள்.

ஸ்நாப் சாட் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் மற்றவர்களுடன் உரையாடுவதற்குப் பயன்படும் சமூக வலைதளம். இதில் ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் தவறாமல் மற்றவர்களுடன் ஒரு புகைப்படத்தையாவது பகிர்ந்துகொள்வதை ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக் என்பர். ஒருவர் வைத்துள்ள ஸ்ட்ரீக்கின் எண்ணிக்கை அவர்களுடைய பேருக்கு அருகில் எண்ணால் குறிக்கப்பட்டிருக்கும். மிக அதிக எண்ணிக்கையுடைய ஸ்ட்ரீக்குகளைக் கொண்டவர்கள் அதிக நண்பர்களைக் கொண்டவர்கள் என்பது பொருள். அதாவது 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் ஒரு புகைப்படத்தை அந்த ஸ்ட்ரீக்கில் உள்ளவர்களிடம் பகிர்ந்தாக வேண்டும். அவ்வாறு பகிர்ந்துகொள்ளவில்லை என்றால் அவர்களுடைய ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக் துண்டிக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் புதிதாகத் தனது ஸ்ட்ரீக்கைத் தொடங்க வேண்டியிருக்கும்.

பாட்டி வீட்டுக்குச் சென்ற மாணவி அங்கு இன்டர்நெட் வசதி சரிவர இல்லாததால், தனது ஸ்நாப் சாட்டை உபயோகிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் குறிப்பிட்ட 24 மணி நேரத்திற்குள் அந்த மாணவியால் புகைப்படத்தை நண்பர்களுடன் பகிர முடியாமல் போய்விடுகிறது. ஆனால், தனது நண்பர்களையும் நட்பு வட்டத்தையும் இந்த ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக்குகள்தான் தீர்மானிக்கின்றன என்னும் உண்மையை அவள் கல்லூரிக்குச் சென்ற பிறகு அறிந்துகொள்கிறாள்.

**அவ்வளவுதானா உங்கள் நட்பு?**

சமூக வலைதளங்களில் வளையவரும் நட்புகளின் உண்மைத் தன்மையைப் பல நேரங்களில் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. நட்பு வட்டத்தில் உள்ள எவருக்காவது லைக் அல்லது கமெண்ட் இடவில்லை என்றாலோ, அவர்களுடைய பதிவை ஷேர் அல்லது ரீட்வீட் செய்யாமல் விட்டாலும், ஸ்நாப் சாட் ஸ்ட்ரீக்குகளைச் சரிவர தக்கவைத்துக்கொள்ளாமல் அந்தச் சங்கிலி விடுபட நேர்ந்தாலோ, சமூக வலைதள நட்பு காணாமல் போய்விடுகிறது.

மெய்நிகர் உலகின் நண்பர்களை உண்மை என்று நம்பி நேரம் முழுவதையும் விரயம் செய்யும் மாய வலைக்குள் பெரும்பாலானவர்கள் சிக்குண்டிருக்கிறார்கள். பள்ளிப் பருவம் முதல் நம்முடன் கூடவே பயணிக்கும் நண்பர்களுக்குச் சமூக வலைதளங்கள் தேவைப்படுவதில்லை. சமூக வலைதளங்களைத் தள்ளிவைத்துவிட்டு அவர்களுடன் நேருக்கு நேர் உரையாடுவதில் அதிக நேரத்தைச் செலவிடுவது மிகவும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். போலராய்டு கேமராக்கள் கொண்டு அவர்களுடன் இருக்கும் மகிழ்வான தருணங்களைப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம். அவர்களிடம் பிரச்சினைகளை மனம்விட்டுப் பேசலாம். அவர்களுடைய பாராட்டுகளால் உத்வேகம் அடையலாம். உதவிகள் தேவைப்படும்போது அவர்களிடம் தயக்கமின்றிக் கேட்கலாம்.

மொபைல் திரைகளுக்கு முன் எதிர்முனையில் இருப்பவர் யார் என்றே தெரியாமல் பேசி நேரத்தைக் கழிப்பதைவிட, சிறு வயதிலிருந்து மனத்துக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்களை எப்போதும் தக்கவைத்துக்கொள்வதே நல்லதாகும்.

[மரபுச் செல்வம் மூழ்கிவிடுமா?](https://minnambalam.com/k/2019/06/27/28)

**

மேலும் படிக்க

**

**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**

**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share