jராகுலுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் அறிவுரை!

Published On:

| By Balaji

இஸ்லாமிய சமூகத்தைக் குறிப்பிட்டு பேச வேண்டாம் எனவும், இதன் மூலம் பாதிப்புகள் ஏற்படுகிறது எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்த அச்சமூக அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்லி துக்ளக் வீதியிலுள்ள ராகுல் காந்தி இல்லத்தில் நேற்று (ஜூலை 12) அவரை இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், இஸ்லாமிய சமூகத்தில் நிலவிவரும் வறுமை, கல்வி மற்றும் பொதுமக்கள் கொள்கை பற்றி விவாதிக்கப்பட்டது.

சந்திப்பின்போது ராகுல் காந்தி பேசுகையில், நாட்டின் எளியவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவு தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். “2019 தேர்தலின்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது இஸ்லாமியச் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நம்பிக்கையைக் காப்பாற்றும்” என்று குறிப்பிட்ட ராகுல், இஸ்லாமியர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று சோனியா குறிப்பிட்டிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.

“இந்தச் சந்திப்பு வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தொடக்கமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளும் எனவும், வரும் காலத்தில் காங்கிரஸ் கட்சி புதுப் பொலிவுடன் முன்னேறும்” என்றும் ராகுல் நம்பிக்கை தெரிவித்தார்.

ராகுல் காந்தி சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வரலாற்று ஆய்வாளர், எஸ்.இர்பாஃன் ஹபீப், “இஸ்லாமிய சமூகத்தின் நலன் கருதி ராகுல் காந்தி சில விஷயங்களைப் பேசி வருகிறார். இது அரசியலில் மற்றவர்களுக்கு வாய்ப்பாகி விடுகிறது. இதை வைத்து அரசியல் செய்யும் சிலர் மற்ற சமூகத்தை இணைத்து தலைவர்களாகி விடுகின்றனர். இதன் மூலம் 96 சதவிகித இஸ்லாமியர்களுக்குப் பாதிப்புதான் ஏற்படுகிறது.

எனவே, இஸ்லாமிய சமூகத்தைப் பற்றி பேசுவதை விடுத்து வறுமை, கல்வி அறிவு போன்ற விஷயங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து ராகுல் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்” என்று குறிப்பிட்டார். 1970ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி, அனைவரையும் உள்ளடக்கிய அரசியலை முன்னெடுத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியதாவது, “இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் என்று பலரும் பங்கேற்ற பல விவாதங்கள் நடைபெற்றன. அதில் 2019 தேர்தல், இஸ்லாமிய சட்ட வாரியம் மற்றும் தற்போதைய அரசியல் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களிலும் இதுபோன்ற விவாதக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, “பிரதமர் நரேந்திர மோடி தன் நண்பர்களான குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களின் முதலாளிகளைச் சந்திப்பதற்கெல்லாம் நேரம் இருக்கும். ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிய விவசாயிகளைச் சந்திக்க நேரம் தரமாட்டார். ஆனால், ராகுல் காந்தி அனைத்துத் தரப்பு மக்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கி அவர்களின் குறைகளைக் கேட்டறிவார். காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமத்துவத்தை நம்புகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share