சங்க இலக்கியங்களில் `யானை’ 170 பெயர்களில் அழைக்கப்படுகிறது. `வேழம், களிறு, பிளிறு, கலபம், மாதங்கம், கைமா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆம்பல், ஆனை, இபம், ரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு , கரி, அஞ்சனம்…’ என அதன் பெயர்கள் நீள்கின்றன.
மனிதர்களுக்கு அடுத்தபடியாக யானைகள் மிகச்சிறந்த அறிவாற்றலை பெற்றுள்ளன. தரையில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையே அதிக கிலோ கொண்டது. அதாவது 5 கிலோவுக்கும் மேல் உள்ளது. அதன் மூளை அமைப்பு மிக நுட்பானது. அதிக நினைவாற்றலையும், சத்தம் கேட்கும் திறனையும், மோப்ப உணர்வையும் தன்னகத்தே கொண்டது.
`யானைகள் அட்டகாசம்’ எனும் பெயரில் தற்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. `யானை’ பற்றி வெளியாகும் தகவல்களில், ஒரு கொடூர வில்லனுக்கு கொடுக்கப்படுவதை விட அதிக பில்டப்புகள் கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில், விவசாய நிலங்களுக்குள் புகுந்து அச்சுறுத்தியதாகவும், ஊருக்குள் அட்டகாசம் செய்ததாகவும் கூறி கோவை மதுக்கரை வனப்பகுதியில் ஒரு காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், கோவை மதுக்கரை அருகே இரு தினங்களுக்கு முன் நள்ளிரவில், 7 யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியே வந்த பெங்களூரு – திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஒரு பெண் பரிதாபமாக யானை பலியானது.
யானைகள் நகரத்திற்குள் படையெடுப்பதற்கும் ரயிலில் அடிபட்டு இறப்பதற்கும் காரணம் என்ன? வனப்பகுதியில் வசித்து வரும் யானைகளை துன்புறுத்துவது யார்?
இந்த விவகாரம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், `காடு’ இதழின் ஆசிரியருமான சண்முகனாந்தத்திடம் பேசினோம். “ பொதுவாகவே விலங்குகள் தங்கள் வசிக்கும் காடு ஒரு கிலோ மீட்டர் சுருங்கினால் மட்டுமே தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வரும். அதை தான் `புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் ஊருக்குள் வந்து விட்டன’ என்று சொல்கிறார்கள். யானைகளை பொருத்தவரை, காட்டில் கும்பலாக வசிக்ககூடியது. அவற்றால் காட்டில் ஒரே இடத்தில் நீண்ட காலமாக வசிக்க இயலாது.
ஒரு யானைக்கு தோராயமாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவு மற்றும் 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அவற்றை மொத்தமாக ஒரே இடத்தில் வசித்து அவை எடுத்து கொண்டால் காடு அழிந்து விடும்.
அதனால் தான் அவை காட்டு பகுதிகளில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா வரை அதன் வழித்தடம் நீள்கிறது. யானைகளின் இடம் பெயர்தல் காட்டின் வளமைக்கான குறியீடு. அவை தாவரங்களின் விதைகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரப்பும் அபார வேலையை அற்புதமாக செய்கின்றன. அதனால் தான் காடுகள் செழிப்பாக இருக்கின்றன.
யானைகள் அபாரமான நினைவுத்திறனை கொண்டிருக்கின்றன. அதனால் அவை தன்னுடைய வழித்தடத்தில் இருந்து பெரும்பாலும் மாறுவது கிடையாது. ஒரு ஆறு மாதத்திற்கு முன் கடந்த சென்ற பாதையை அவை திரும்பி வந்து பார்க்கும் போது அங்கே ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டிருந்தால், அந்த யானைகள் என்ன செய்யும்? தன் வழித்தடம் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும் போது தான் அவை வழி மாறுகின்றன. அதை உடனே எல்லோரும் அட்டகாசம் செய்கிறது என கூறுகின்றனர், ” என்றார்.
நாம் வசிப்பதற்காகவும், நம்முடைய சுய லாபத்திற்காகவும் வனங்களை அழித்து கொண்டே இருக்கிறோம். ஏற்கனவே பெருமளவு வனங்கள் காணாமல் போய் விட்டன. தேசிய வனவிலங்கு வாரியம், இந்தியாவில் கடந்த இரண்டாண்டு காலகட்டத்தில் மட்டும் 300க்கும் திட்டங்களை வனவிலங்கு இருப்பிடங்களுக்கு அருகில் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
வனங்கள் மற்றும் அதன் வழித்தடங்களை ஆக்ரமித்து நம்முடைய போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி நாம் பயணப்படுகிறோம். அப்படி எனில், அங்கு வசிக்கும் யானைகள் எந்த வழியில் பயணம் செய்யும்? கோவை, மதுக்கரை ரயில் தண்டவாளத்தில் அப்படி கடந்து போன ரயிலில் மோதி மரித்து போயிருக்கிறது.
இதுகுறித்து ஓசைகள் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ் பேசினோம். அவர் கூறுகையில், “ கோவை மற்றும் பாலக்காடு பகுதியில் கடந்த 2008ல், ரயில் மோதி நான்கு யானைகள் இறந்தன. அந்த பகுதியின் ரயில்வே நிர்வாகம் தான் இதற்கு பொறுப்பு என்று போராட்டம் நடத்தினோம்.
இதைத்தொடர்ந்து இந்த பகுதியில் ரயில் 40 கிலோமீட்டர் வேகத்துக்குள் தான் செல்ல வேண்டும் என உத்தரவு பிறக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த விதிமுறையை ரயில்வே நிர்வாகம் கடைப்பிடிப்பதில்லை. அதனால் தான் ரயிலில் அடிபட்டு இறக்கும் யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. யானைகள் ஒரு போதும் தண்டவாளங்களை கடப்பதில்லை. மாறாக தண்டவாளங்கள் தான் யானையின் வழித்தடத்தை ஆக்ரமித்துள்ளன. அதனால் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் எனில், யானைகள் வழித்தடங்களில் ரயில் குறிப்பிட்ட கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும். அதேபோல, நமது போக்குவரத்து வசதிகளுக்காக, வனங்களை ஒட்டிய பகுதிகளை ஆக்ரமிக்காமல், மிக உயர்ந்த பாலங்களை அமைத்து பயணம் செய்யலாம், ” என்றார்.
இதற்கெல்லாமே அடிப்படையில் நாம் தான் காரணமாக இருக்கிறோம். அரசு தான் காரணமாக இருக்கிறது. வளர்ச்சியை காரணம் காட்டி காடுகளை அழிப்பதும், சுரங்கம் அமைக்க காடுகளை தனியாருக்கு தாரை வார்ப்பதும் யார் என யோசித்தால், இந்த பிரச்னைக்கான தீர்வை அறிந்து கொள்ள முடியும்.
உயிர் சுழற்சி அனைத்து உயிரினங்களையும் அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்ந்து வருகின்றன. அதனால் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பாதிக்கப்பட்டால், இயற்கையாகவே மனித உயிரினமும் அழிவை நோக்கி நகரும் என்பது இயற்கை சூழலியல் விதியாக உள்ளது.�,