ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான என்.டி.ஆர், ராஜசேகர ரெட்டி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள்தான் தெலுங்கு திரையுலகில் முக்கியமாகப் பேசப்பட்டுவருகின்றன.
ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கில் அவரது கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் டப்பிங் இல்லாமல் அவரே வசனம் பேசி நடிக்கிறார். யாத்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் 1999 முதல் 2004ஆம் ஆண்டு காலத்தில் ராஜ சேகர ரெட்டியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. மகி ராகவ் இயக்கி வருகிறார்.
என்.டி.ஆரின் பயோபிக் இரு பாகங்களாக தயாராகிவருகிறது. திரைத்துறையைச் சார்ந்த காலகட்டத்தை ‘என்.டி.ஆர் -கதாநாயகுடு’ என்ற பெயரிலும் அரசியல் வாழ்க்கை ‘என்.டி.ஆர்-மகாநாயகுடு’ என்ற பெயரிலும் தயாராகிவருகிறது. என்.டி.ஆராக அவரது மகனும் தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா நடிக்கிறார். துணைக்குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். க்ரிஷ் இயக்கும் இந்தப் படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்துவருகிறார்.
யாத்ரா திரைப்படம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரியில் என்.டி.ஆர் பயோபிக் வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரு படங்களையும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெலுங்கு திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன.�,