மோடி ஆட்சியில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி உலக நாடுகளைச் சேர்ந்த 108 பொருளாதார அறிஞர்களும், அறிவியலாளர்களும் கையெழுத்திட்டு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அரசுத் தரவுகள் வெளியிடுவதில் அரசியல் தலையீடுகள் குறித்து அந்தக் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தரவுகளை மீட்டெடுப்பதற்கான செயல்திட்டம் தேவை என்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலங்காலமாக பல்வேறு புள்ளி விவரங்கள் இந்திய அரசால் வெளியிடப்பட்டு வந்தாலும், அண்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள சில புள்ளி விவரங்கள் தொடர்பான சர்ச்சைகள் பெருமளவில் வெடித்தன. உள்நாட்டு உற்பத்தி தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் புள்ளியல் துறையின் வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகள் சர்ச்சையைக் கிளப்பின. இவற்றில் மத்திய அரசின் தலையீடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.
இதுகுறித்து உலக நாடுகளைச் சேர்ந்த 108 பொருளாதார அறிஞர்களும், அறிவியலாளர்களும் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “புள்ளியல் துறையின் தரவுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பது மிகவும் கவலையளிக்கக் கூடியது. இத்தகைய நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படும் வகையில் புதுப்பிக்கப்பட வேண்டும். புள்ளியல் நிறுவனங்கள் நேர்மையாக இயங்க வேண்டும். 2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி பல்வேறு பொருளாதார வல்லுநர்களின் கணிப்புகளுக்கு மாறுபட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகளை வெளியிட தாமதித்த காரணத்தால் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர். உண்மையான தரவுகளை அரசியல் தலையீடுகளால் ஒடுக்க நினைக்கும் போக்குக்கு எதிராக தொழில்முறை பொருளாதார நிபுணர்கள், புள்ளியியலாளர் மற்றும் சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று கூறியுள்ளனர்.
இந்த அறிக்கையில், அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (ஐஐஎம்) ராகேஷ் பசண்ட், அமெரிக்காவின் மசாகட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் போய்ஸ், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் எமிலி பிரீசா, டெல்லி பல்கலைக்கழகத்தின் சதீஸ் தேஸ்பண்டே, கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பாட்ரிக் ஃபிரான்காய்ஸ், மும்பை டி.ஐ.ஐ.எஸ். நிறுவனத்தின் ஆர்.ராம்குமார், பெங்களூர் ஐஐஎம்-மின் ஹேமா சுவாமிநாதன் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரோஹித் அசாத் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தேசிய புள்ளியல் துறையின் செயல் தலைவராக இருந்து அண்மையில் பதவி விலகிய மோகனன் இதுகுறித்து *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இது சரியான நேரத்தில் அனுப்பப்பட்டிருக்கும் செய்தி. பொருளாதார வல்லுனர்களால் வெளிப்படுத்தப்படும் இந்த உணர்வுகளை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிஞர்கள் வெளிப்படுத்தும் இந்த கவலை அண்மைக்கால பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும்” என்று கூறியுள்ளார்.�,