முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்காததைக் கண்டித்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு மாணவர்கள் இன்று (நவம்பர் 23) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்துகொண்டே முதுநிலை மருத்துவப் படிப்பு படித்துவரும் மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் புதிய மருத்துவர்களை தேர்வுசெய்வதைக் கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதால், சேவையாற்றிக்கொண்டே படிக்கும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம், எங்கள் உரிமை பறிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள 566 முதுநிலை மருத்துவர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப முதலில் எங்களுக்குக் கலந்தாய்வு நடத்த வேண்டும், அதன் பிறகே தனியார் மருத்துவர்களுக்குக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அமைச்சர் விஜயபாஸ்கர் இங்கு வந்து எங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கும்வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் முன்பு முதுகலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.�,