ஜெயலிலதா தொடர்ந்த வழக்கையே சந்தித்தவன் தான் என்றும், தன்மீது அவதூறு வழக்கு போட்டால் அவர்கள்தான் ஏமாந்துபோவார்கள் என்றும் தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் நடந்த கூட்டம் ஒன்றில், முக்கொம்பு தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதையடுத்து அவர் மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று (பிப்ரவரி 12) திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆஜரானார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்மீது இந்த மான நஷ்ட வழக்கு போடுவதற்கு முதல்வருக்கு தகுதி கிடையாது. முதலமைச்சர் லஞ்சம் வாங்குவதைப் பற்றித்தான் இதுவரையில் பேசி வந்தேன். கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும் அவர்தான் காரணம் என்பதைப் பற்றி இனிமேல் மீண்டும் மீண்டும் பேசுவேன். இதற்காக இன்னொரு வழக்கை அவர் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா போட்ட வழக்கையே சந்தித்தவன் நான். ஆகவே இந்த வழக்குகளைப் போட்டெல்லாம் என்னை முடக்கிவிடலாம் என்று நினைத்தால் அவர்கள்தான் ஏமாந்துபோவார்கள். கொடநாடு கொலை மட்டுமல்ல 30, 40 வருடங்களுக்கு முந்தைய அவர் சம்மந்தப்பட்ட கொலைகள் பற்றியும் இனிமேல் பேசுவேன்” என்றார்.
மேலும், “புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் தொண்டர்களிடையே ஒரு மிகப்பெரிய புத்துணர்வு ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராகக் காமராஜர் இருந்தபோது அவரைக்கொல்ல முயற்சி செய்தவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். அந்த வழியில் வந்த பிரதமர் மோடிக்கு காமராஜரைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதியிருக்கிறது என்று தெரியவில்லை”என்றும் அவர் தெரிவித்தார்.�,