jமகன் மீதான புகார்: மௌனம் கலைத்த அமித் ஷா

Published On:

| By Balaji

தனது மகன் எந்த விதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷாவிற்குச் சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வருவாய் 2013-14ஆம் ஆண்டைவிட 2015-16ஆம் ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்து ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டது. அரசியல் வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி பதில் கூற வேண்டும், அமித் ஷா பதவி விலக வேண்டும், ஜெய் ஷா நிறுவனத்தில் சி.பி.ஐ., அமலாக்கத் துறை மூலம் சோதனை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகின்றன. இந்த விவகாரத்தால் பாஜவின் நற்பெயர் கெட்டுவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்திருந்தார். இந்நிலையில், எந்த வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்த ஜெய் ஷா, இது தொடர்பாக தி வயர் நிறுவனம் மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமாக இருந்துவந்த அமித் ஷா தற்போது முதன்முறையாக இது குறித்துப் பேசியுள்ளார். தனது மகன் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என இன்று (அக்.13 ) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “ஜெய்யின் வியாபாரத்தில் எந்த விதமான பண மோசடியும் நடைபெறவில்லை. அந்நிறுவனமானது முழுமையாகச் சரக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய நிறுவனங்களில் நிறுவன விற்றுமுதலானது அதிகமாக இருக்கும். ஆனால் லாபம் என்பது குறைவாக இருக்கும். ரூ. 80 கோடி விற்றுமுதல் கிடைத்தபோதும் நஷ்டம் ரூ.1.5 கோடி. எல்லாப் பரிவர்த்தனைகளும் காசோலை மூலமாகவே நடைபெறுகின்றன. எனவே பண மோசடி என்ற கேள்விக்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஜெய் ஷா விவகாரத்தில் ஊழல் எதுவும் இல்லை. காங்கிரஸ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருமுறையாவது அக்கட்சி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதா? அவர்களுக்கு ஏன் தைரியம் இல்லை? ஜெய் ஷா தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு எதிரான ஆதாரம் உங்களிடம் இருந்தால், அதை நீதிமன்றத்துக்கு எடுத்து வாருங்கள்” எனவும் அவர் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel