இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு மாற 57 விழுக்காடு தனிநபர்கள் தயாராக இருப்பதாக ஓலா மொபிலிட்டி இன்ஸ்டிடியூட் ஆய்வு கூறியுள்ளது.
*ஈஸ் ஆஃப் மூவிங் இண்டெக்ஸ் 2018* என்ற தலைப்பில் *ஓலா மொபிலிட்டி இன்ஸ்டிட்யூட்* இந்தியாவில் பேட்டரி வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என்ற ஆய்வை நடத்தியுள்ளது. டெல்லி, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், மும்பை, சூரத், ஜெய்ப்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட 20 முக்கிய நகரங்களில் 43,000 தனிநபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பங்கெடுத்த 57 விழுக்காடு மக்கள் தாங்கள் வழக்கமாகப் பயன்படுத்தி வரும் எரிபொருட்களான பெட்ரோல், டீசலைக் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக, அடுத்த சில ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களுக்கு மாறுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் பேட்டரி வாகனங்கள் உற்பத்திக்கு மிகப் பெரிய தட்டுப்பாடு நிலவுகிறது. உள்நாட்டில் இதற்கான தயாரிப்புச் செலவுகளும் மிக அதிகமாக உள்ளது. பேட்டரி தயாரிப்புக்கான சந்தையும் இங்கு இன்னும் விரிவடையாமல் உள்ளது. 90 விழுக்காட்டுக்கும் அதிகமான பேட்டரி பயன்பாடுகள் இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. பேட்டரி ரீசார்ஜ் மையங்களும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. ரீசார்ஜ் மையங்கள் நிறுவுவதற்கான செலவும் மிக அதிகமாக உள்ளது. இவற்றுக்கான முன்முயற்சிகளை ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்து வரும் சூழலில், பேட்டரி வாகனங்கள் பெருமளவில் சந்தைக்கு வரும் முன்னரே அவற்றின் பயன்பாட்டுக்கு மாற மக்கள் தயாராக இருப்பதை இந்த ஆய்வு வெளிக்காட்டியுள்ளது.
*ஓலா மொபிலிட்டி இன்ஸ்டிட்யூட்* அடுத்த சில ஆண்டுகளில் 1 லட்சம் பேட்டரி வாகனங்களை இந்தியச் சாலைகளில் இயக்கும் விதமாக *மிசன் எலெக்ட்ரிக்* என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.�,