�
பிகாரில் பெண்கள் காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறையை தொடர்ந்து அங்கு இவற்றை நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட 50 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டன என நேற்று (21.8.18) அந்த மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
முசாபர் நகரில் பெண்கள் காப்பகம் ஒன்றில் கடந்த 4 ஆண்டுகளாக 34 பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியாகின. மும்பையிலுள்ள டாட்டா சமூக அறிவியல் நிறுவனம் 110 காப்பகங்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்த ஆய்வு அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக் கொண்டு வந்தது. மேலும் அந்த காப்பகத்தில் இரண்டு பெண்கள் இறந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
பிகாரில் இவ்வழக்கு தொடர்பாக மாநிலத்தின் நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மாவும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர். வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த காப்பகத்தை நடத்திய பிரஜேஷ் தாக்கூர் என்பவருடன் வர்மாவின் கணவர் சண்டேஷ்வர் வர்மா தொடர்பு கொண்டிருந்தார் என்பதால் அவரும் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்கத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் இனி அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் காப்பகங்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் 3 மாதங்களுக்குள் அரசு அவற்றை எடுத்து நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் தொடக்கத்தில் அம்மாநிலத்தின் முதல்வர் நித்தீஷ் குமார் பிகாரில் இனிமேல் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் காப்பகங்கள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருந்தார்.�,