பார்வதி நடிப்பில் வெளியான டேக் ஆஃப் திரைப்படம் தங்க மயில் விருதுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் திக்ரித் நகரில் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இந்திய செவிலியர்களைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி மலையாளத்தில் எடுக்கப்பட்ட படம் டேக் ஆஃப். இந்தப் படத்தில் சமீரா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் பார்வதி. கடந்த மார்ச் மாதம் வெளியான இந்தப் படத்தை மகேஷ் நாராயண் இயக்க குஞ்சாகோ போவன், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
நல்ல விமர்சனங்களை பெற்ற இந்தப் படம் கேரளா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியிருந்த நிலையில் தற்போது 48 வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச படங்களுக்கான பிரிவில் தேர்வாகியுள்ளது. தங்க மயில் விருதுக்கான இந்த பிரிவில் ஜப்பான், கொரியா, ஜெர்மன், தைவான், சீனா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் 15 படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த படங்களோடு டேக் ஆஃப் திரைப்படமும் போட்டி போடவுள்ளது.
மேலும் இதே பிரிவில் சர்வதேச குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் தங்க யானை விருது பெற்ற வில்லேஜ் ராக்ஸ்டார் படம் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை அசாம் மாநிலத்தை சேர்ந்த ரீமா தாஸ் இயக்கியுள்ளார். கிராமத்தில் வாழும் ஒரு ஏழைச் சிறுமி ராக் இசைக்குழு அமைக்க வேண்டும் என்று கனவு காண்பதை மையப்படுத்தி அதற்காக அவள் படும் சிரமங்களை எடுத்துக்கூறும் படமாக இது உருவாகியுள்ளது.
இதே பிரிவில் இடம்பெற்றுள்ள கச்சா லிம்பு என்ற மராத்தி திரைப்படம் 15 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகன் மற்றும் அவனுக்கு ஏற்படும் பாலியல் உணர்வுகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போராடும் பெற்றோரை மையப்படுத்திய படம்.
இந்த மூன்று படங்களும் சர்வதேச படங்களுடன் போட்டி போட்டு வெற்றிபெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.�,”