பிடி பருத்தி விதைகளுக்கானத் தேவை ஒரே ஆண்டில் 20 முதல் 30 விழுக்காடு வரை குறைந்துவிட்டதாக விதை நிறுவனங்கள் கூறியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் பருத்திப் பருவம் தற்போது தொடங்கியுள்ளது. ஆனால், பருத்தி பயிரிடுவதற்கான ஆர்வம் அம்மாநில விவசாயிகளிடம் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் பிடி பருத்தி விதைகள் வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதே இதை உறுதிப்படுத்துவதாக அம்மாநில விதை விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. பலர் பருத்திக்குப் பதிலாக நெல், சோளம் போன்றவற்றை பயிரிட ஆர்வம்காட்டியுள்ளனர். பருத்தியை விட இவற்றில் அதிக வருவாய் கிடைப்பதே இதற்குக் காரணமென்றும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலத்திலும் காரிஃப் பருவ சாகுபடி பரப்பளவு 15 முதல் 20 விழுக்காடு வரை சரியுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பருத்தி விதைகளின் விலையும் நடப்பு ஆண்டில் 8 விழுக்காடு சரிய வாய்ப்புள்ளது. இதுகுறித்து பஞ்சாப் மாநிலத்தின் ஃபசில்கா பகுதியைச் சேர்ந்த விதை விநியோக நிறுவனமான ராசி சீட்ஸ் நிறுவனர் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “பருத்தி விதைகளுக்கானத் தேவை இந்த ஆண்டில் 20 முதல் 30 விழுக்காடு வரை குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல் விளைச்சல் சிறப்பாக இருந்தது. இந்தப் பருவத்தில் பருத்தி சாகுபடி குறைய இதுவும் ஒரு காரணமாகும்” என்று கூறியுள்ளார்.�,