மத்திய அரசின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் – டிசம்பர் காலாண்டின் இந்தியாவின் முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளன.
கறுப்புப் பணப் புழக்கம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி, புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500 மற்றும் ரூ.1000 ஆகிய நோட்டுகளை செல்லாதவைகளாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நாட்டில் பல்வேறு தயாரிப்புகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டது. பணத் தட்டுப்பாடு காரணமாக மக்களின் தேவை குறைந்து, பொருட்களின் விற்பனை சரிவடைந்தது.
எடில்வைஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், ஆதித்யா பிர்லா ஃபேஷன் & ரீட்டைல், வான் ஹூசன், பீட்டர் இங்கிலாண்ட், பாண்டலூன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியாவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆதித்யா பிர்லா ஃபேஷன் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி விற்பனை இழப்பு ஏற்பட்டுள்ளது. பண்டிகை சீசனை முன்னிட்டு நவம்பர் மாதம் முதல் வாரம் வரையில் ஆடை விற்பனை சிறப்பாக இருந்தது. பின்னர் வெளியான பண்மதிப்பழிப்பு அறிவிப்பால் விற்பனை குறையத் தொடங்கியது. இந்நிறுவனங்களைப் போலவே, ஆயத்த ஆடை விற்பனையில் முன்னிலையில் இருக்கும் ரேமண்ட் நிறுவனத்துக்கும் அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பாலிஸ்டர் துணி தயாரிப்பாளராகத் திகழும் சிந்தெடிக் டெக்ஸ்டைல் நிறுவனம், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் 400 சதவிகிதத்திற்கும் மேலான சரிவுடன் ரூ.37.95 கோடியை இழந்துள்ளது. அதேபோல, இந்நிறுவன வருவாய் இக்காலாண்டில் ரூ.623.92 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வருவாய் ரூ.663.25 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பணமதிப்பழிப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்பும் நோக்கில் இந்நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. திட்டம் அமல்படுத்தப்படுவதை எதிர்நோக்கியுள்ளன.