தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை நேற்று (ஜூலை 10) கோவில்பட்டி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் 100ஆவது நாளில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தூத்துக்குடி கலவரத்தின்போது போலீசார் பயன்படுத்திய 17 துப்பாக்கிகள் மற்றும் 150 காலித் தோட்டாக்களை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் கலையரசன் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவர் சங்கரிடம் நேற்று ஒப்படைத்தனர்.
இதற்கு முன்னதாக, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் ரத்தக்கறை படிந்த உடைகள், உடலிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள், போன்றவற்றை சிபிசிஐடி ஆய்வாளர் உலக ராணி தலைமையிலான போலீசார் கோவில்பட்டி ஜே .எம் நீதிமன்றத்தில் நீதித் துறை நடுவர் சங்கரிடம் கடந்த 9ஆம் தேதி ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட பொருள்களை சென்னையில் ரசாயனப் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.�,